மயிரிழையில் உயிர்தப்பிய ஆப்கான் துணை ஜனாதிபதி!

ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்துள்ளார்.

துணை ஜனாதிபதியை குறிவைத்து தெருவோர வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

இதுகுறித்து அம்ருல்லா சலே அலுவலகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் துணை ஜனாதிபதி சலேவுக்கு எதிராக எதிரிகள் இன்று மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தனர். ஆனால், அவர்களது மோசமான எண்ணம் தோற்றுவிட்டது. இந்தத் தாக்குதலில் சலேவின் பாதுகாவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துணை ஜனாதிபதிக்கு இந்தத் தாக்குதலில் சிறிய அளவே காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடித்த உடனேயே பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், சலே தனது இடது கையில் கட்டுகளுடன், தனது தொடரணி தாக்கப்பட்டபோது தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறினார்.

“நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் எனது காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். என்னுடன் காரில் இருந்த என் மகன், நான் இருவரும் நன்றாக இருக்கிறோம். என் முகத்திலும் கைகளிலும் சில தீக்காயங்கள் உள்ளன. குண்டு வெடிப்பு வலுவாக இருந்தது. ‘தீய பயங்கரவாத முயற்சி தோல்வியடைந்தது“ என்றார்.

முன்னாள் உளவுத்துறை தலைவரும், வெளிப்படையாக தலிபான் விமர்சகருமான சலே, பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளார்.

இந்தத் தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் பலியானதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித், தலிபான்கள் இந்த தாக்குதலில் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here