தமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்: கட்சியை கைப்பற்ற காய்நகர்த்தும் அரவிந்தன் தரப்பு!

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் தலைமைத்துவ மோதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்து தேர்தலில் போட்டியிட்ட ச.அரவிந்தன் தரப்பு கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் “அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாகும்“ சங்கதிதான் நடந்து வருகிறது. கட்சியின் தலைமையிலிருக்கும் ஆனந்தசங்கரியை அகற்றிவிட்டு, தலைமையை கைப்பற்ற ச.அரவிந்தன் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

ச.அரவிந்தனின் இந்த முயற்சியை, வீ.ஆனந்தசங்கரி முன்னரே மோப்பம் பிடித்ததால், இரு தரப்பிற்குமிடையில் நீண்டநாட்களாக பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் தனது சுவரொட்டிகளில் கட்சியின் மூத்த துணைத்தலைவர் என்றே ச.அரவிந்தன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கட்சியில் அப்படியொரு பொறுப்பே கிடையாது என்கின்றனர் கட்சி வட்டாரங்கள்.

இது குறித்து அப்பொழுதே வீ.ஆனந்தசங்கரி, அரவிந்தனிடம் கேட்டுள்ளார். “கட்சியின் அடுத்த தலைவர் நான் தானே“ என அதற்கு அரவிந்தன் பதிலளித்தாராம். விடுதலைப் புலிகளின் ஆதரவுடன், இரா.சம்பந்தன் தரப்பே ஆனந்தசங்கரியிடமிருந்து கட்சியை எடுக்க பகீரத பிரயத்தனம் செய்து பார்த்திருந்தார்கள். ஆனால் சங்கரி இந்த விடயத்தில் பயங்கர அலேர்ட். சம்பந்தர் தரப்பால் முடியவில்லை.

இப்பொழுது ச.அரவிந்தன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். கட்சி தலைவரிற்கு அடுத்த நிலையையுடைய- கட்சியின் மூத்த பிரதி தலைவர் என்ற புதிய நியமனத்தை சட்டபூர்வமாக மேற்கொள்ள அரவிந்தன் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கட்சியின் நிர்வாககுழுவிலுள்ள சிலரை வளைத்து போட்டுள்ளதாக தகவல். அவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து, நிர்வாக குழுவை கூட்டி, மூத்த பிரதித்தலைவர் என்ற நியமனத்தை சட்டபூர்வமாக்க அரவிந்தன் தரப்பு முயற்சிக்கிறது. சங்கரியின் காலத்தின் பின்னர் கட்சியின் தலைவராகுவதற்கு அரவிந்தன் தரப்பு மேற்கொள்ளும் முயற்சி இது.

இம்முறை வெற்றி வாய்ப்பு இல்லையென்பது தெரிந்தும், தமிழர் விடுதலை கூட்டணி சின்னத்தில் அந்த தரப்பு போட்டியிட்ட சூட்சுமமும் இதுதான் என ஆனந்தசங்கரி தரப்பு கருதுகிறது.

இப்போது பிந்திய நிலவரமாக- மட்டக்களப்பிலுள்ள இரண்டு உறுப்பினர்கள் மூலம், கட்சியின் நிர்வாககுழுவை கூட்டும் கோரிக்கை கடிதத்தை அரவிந்தன் தரப்பு அனுப்பியுள்ளது. நிர்வாககுழு உறுப்பினர்கள் கோரினால், நிர்வாககுழு கூட்டத்தை கூட்டியே தீர வேண்டும், அதில் மூத்த பிரதி தலைவர் நியமனத்தை சட்டபூர்வமாக்கி கொள்ளலாமென அரவிந்தன் தரப்பு கணக்கு போட்டுள்ளது.

எனினும், அதற்கு இடமளிக்க சங்கரி தரப்பு தயாரில்லையென்பதை தமிழ்பக்கம் அறிந்தது. அதாவது- இப்போதைக்கு கட்சியின் நிர்வாககுழு கூட்டத்தை கூட்ட ஆனந்தசங்கரி தரப்பு தயாரில்லை.

அத்துடன், பொருத்தமான ஒருவரிடம் கட்சியின் தலைமையை ஒப்படைப்பது குறித்தும் ஆனந்தசங்கரி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

சங்கரி- அரவிந்தன் மோதல் கட்சிக்குள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டும் திரைமறைவு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் அண்மையில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் ச.அரவிந்தனுடன்தான் பேச்சு நடத்தியுள்ளார்.

அந்த சந்திப்பு தமிழர் விடுதலை கூட்டணியின் நாச்சிமார் கோவிலடியிலுள்ள கட்சி அலுவலகத்தில்தான் நடந்தது. அந்த அலுவலகம் சங்கரி யாழ்ப்பாணத்தில் நிற்கும் நாட்களில்தான் திறப்பது வழக்கம். மற்றும்படி திறக்கப்படுவதில்லை. ஆனால் அலுவகத்தின் திறப்பு அந்த வளாகத்திலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

அரவிந்தன் அந்த திறப்பையெடுத்து அலுவலகத்தை திறந்து, கலையமுதனை அழைத்து, ஒரு மணித்தியாலம் பேச்சு நடத்தினார் என ஆனந்தசங்கரி தரப்பு இப்போது குற்றப்பத்திரம் வாசிக்கிறது.

இரண்டு, மூன்று பேர்தான் கட்சியில் இருந்தாலும் அரசியல் கட்சிக்கேயுரிய அத்தனை சுவாரஸ்யங்களும் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் கூடுதல் சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here