தீர்வுக்கான பொறிமுறை தமிழர் தரப்பில் இன்றுவரை இல்லை: சபா.குகதாஸ்

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க 2009 ஆம் இண்டு முள்ளிவாய்க்கால் யுத்த முடிவிற்கு பின்னர், கட்டமைக்கப்பட்ட பொறிமுறை இராஐதந்திரம் முறையாக வகுக்கப்பட்டு கையாளப்படவில்லை இது தமிழர் தரப்பின் பலவீனமான பக்கமாகவே இன்று வரை தொடர்கிறது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில்,

2009 முன்பு விடுதலைப் புலிகள் போராட்டம் மூலம் பொறிமுறை நகர்வுகளை மேற்கொண்டனர். ஆனால் இராஜதந்திர வியூகங்கள் அரசியல் ரீதியாக கையாளப்படாமையால் அதன் அறுவடையை பெற முடியாது மௌனிக்கப்பட்டது.

2009 பின் மீண்டும் மிதவாத தமிழ் தலைவர்களுடன் முன்னாள் ஆயுதப்போராட்ட தலைமைகளும் இணைந்து ஐனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையைப் பெற்று ஜனநாயக ஆசனங்களை அலங்கரித்தனர். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய பொறிமுறைக் கட்டமைப்பை கையாள இன்று வரை தவறி விட்டனர்.

இந்த விடயத்தில் தமிழர் நலன் சார்ந்த தேசிய கட்சிகள், அமைப்புக்கள் இன்றுவரை ஒன்றிணைந்த ஓரணியில் நிற்க தவறியுள்ளனர்.

அத்துடன் சில அமைப்புக்கள் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைந்தனர். அதற்கான மக்கள் அபிப்பிராயத்தை பெற தவறியுள்ளனர். மற்றும் சில தமிழ் தேசிய கட்சிகள் மறுபட்ட தீர்வுக்கான வடிவங்களை கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தீர்வை வலியுறுத்துவதற்கான வியூகங்கள் சம நேரத்தில் கூட்டாக கையாளப்படவில்லை. அதற்கான பொறிமுறை கூட்டாக உருவாக்கப்படாமை மிதவாத தலைவர்களின் சாணக்கிய தோல்வியாகும்.

எதிர்வரும் காலம் தமிழர் தரப்பு தேசிய சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் தீர்வுக்கான பொறிமுறைகளை தயாரித்து அதற்கான குழுக்கள் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திர வியூகங்களுக்கு ஏற்ப காய் நகர்த்த தவறினால் தமிழர்களின் தாயக இருப்புக்கள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாத நிலை உருவாகும் என சபா. குகதாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here