தகனம் செய்வதற்கு எதிரான மனு நவம்பர் 26ஆம் திகதி!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை, நவம்பர் 26ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பல முன்னாள் எம்.பி.க்கள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், இன்னும் அறிவித்தல் வழங்கப்படவில்லை.

மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும் உலகின் பல நாடுகளில் அடக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படும்போதும், அதில் எந்த ஆபத்தும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலும் அதை அங்கீகரிக்கின்ற போது, இலங்கையில் தகனம் செய்யும் நடைமுறையை பேண எந்த காரணமும் இல்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவினால் உயிரழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் பரிந்துரைப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மேலும் சிறந்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து தொடர்புடைய பகுதிகளின் நிபுணர்களின் குழுவையும் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here