இந்திய மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய செயற்பாடுகளை கண்டித்து மன்னார் பேசாலை கிராம மக்கள் இன்று (9) புதன் கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பேசாலை கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 8.45 மணியளவில் பேசாலை பஸார் பகுதியில் இடம் பெற்றது.

அயல் நாட்டு இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பினுல் அத்து மீறி நுழைந்து கடல் வளங்களை அழித்து வருகின்றமையினை கண்டித்தும், பேசாலை உட்பட கரையோர பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் கொண்டு வருகின்ற நடவடிக்கைகளை கண்டித்தும், கொரோனா பரவலை ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தை கண்டித்தும், இந்திய இழுவைப்படகுகளினால் மன்னார் மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றமையினையும் கண்டித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேசாலை கிரமத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லாமல் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக எமது கடல் எமது மக்கள் தொழில் புரிவதற்கே இந்திய மக்களுக்கல்ல, இந்திய அரசே எமது கடல் வளத்தை அழிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து, இலங்கை அரசே எமது மீனவர்களை பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்று உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது அனுபவிக்காத பல்வேறு பிரச்சனைகளுக்கு தாம் தற்போது முகம் கொடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பேசாலை கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையின் காரணமாக எமது கிராமங்களில் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றது.

குறிப்பாக கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வருகின்ற இந்திய இழுவைப்படகுகள் மன்னார் முனை வரைக்கும் வந்து போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளுகின்றனர்.

இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் போதைப்பொருளுக்கு அடிமையாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வட பிராந்திய கடல் பகுதிகளில் திறந்து விடப்படுகின்ற அனைத்து பகுதிகளையும் இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தினரால் மூடப்பட வேண்டும்.

குறித்த பகுதிகளினூடாக அனுமதிக்கப்படுகின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் போதைப்பொருட்கள் மற்றும் பணம் பறிமாற்றபடும் சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கும்,பொருளாதார ரீதியாகவும் பாதீப்படைந்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறித்த விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

போதைப்பொருட்களின் ஊடாக எமது நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இலங்கை கடற்படை இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய இலங்கை வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னார் மெசிடோ நிறுவனம் அனுசரனை வழங்கியுள்ளது.

குறித்த போராட்டத்தின் போது அருட்தந்தையர்கள், பேசாலை கிராம மக்கள், மீனவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here