சிறைக்குடியிருப்பிற்கே பெண்களை அழைத்து சென்று போதையேற்றி சீரழித்த வேலூர் சிறைக்காவலர்!

”போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்கவைத்து, மயங்கிய என்னை ஆபாச வீடியோ எடுத்து, ஓராண்டுக்குமேல் வன்கொடுமை செய்தார்’’ என்று இளம்பெண் ஒருவர், ஆரணி பகுதியைச் சேர்ந்த சிறைக்காவலர் கணேஷ்குமார்மீது கொடுத்த புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

வேலூரிலுள்ள சிறைக்காவலர்களுக்கான அரசுக் குடியிருப்பில் இந்த வன்கொடுமை நடந்ததாக அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

ஆகஸ்ட் 28-ம் தேதி… சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், வேலூரிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து கதறி அழுதார். ஆசுவாசப்படுத்திய போலீஸாரிடம், சிறைக்காவலர் கணேஷ்குமாரால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விவரித்தார். அத்துடன், அவரிடமிருந்த வீடியோ ஆதாரங்களையும் காண்பித்தார். திகைத்துப்போன போலீஸார் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் கணேஷ்குமார்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதன் பிறகு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

‘‘சிறைத்துறை அதிகாரிகளின் தலையீடுகளால் வழக்கை மூடிமறைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. சிறைக்காவலர் கணேஷ்குமாரை வேலூரிலிருந்து வந்தவாசி கிளைச்சிறைக்கு அவசர அவசரமாகப் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். விடுமுறையளித்து தலைமறைவாக இருக்கவும் அறிவுறுத்தியிருக் கிறார்கள்’’ என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியபோது, ‘‘நான் குழந்தையா இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. அம்மாதான் கஷ்டப்பட்டு கூலிவேலைக்குப் போய் என்னைப் பார்த்துக்கிறாங்க. பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். கஷ்டத்தால மேற்படிப்பைத் தொடர முடியாம வீட்டுலதான் இருக்கேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஃபேஸ்புக் மூலமா கணேஷ்குமாரோட அறிமுகம் கிடைச்சுது. ‘வேலூர் சிறையில போலீஸா வேலை பார்க்கிறேன். ஆரணி பக்கத்துல இருக்கிற செங்கனாவரம் கிராமம்தான் சொந்த ஊரு. சிறைத்துறை டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு எதிர்ல இருக்கும் அரசுக் குடியிருப்புலதான் தங்கியிருக்கேன்’னு நல்லவன் மாதிரியே பேசினான்.

போன வருஷம் அத்திவரதர் தரிசனத்துக்காகக் காஞ்சிபுரம் போனேன். கணேஷ்குமாரும் வந்தான். அப்போதான் ஃபர்ஸ்ட் டைம் சந்திச்சுக்கிட்டோம். ‘நீ ரொம்ப அழகா இருக்கே… உன்னை லவ் பண்றேன். நீ இல்லைனா செத்துடுவேன்’னு என்னென்னமோ பேசி என் மனசைக் கலைச்சிட்டான். அப்புறம் அடிக்கடி சென்னை வந்து என்னைப் பார்த்துட்டு போனான். உண்மையாத்தான் லவ் பண்றான்னு நினைச்சு நானும் லவ் பண்ணினேன்.

போன வருஷம் ஆகஸ்ட் 31-ம் தேதி, என்னை வேலூருக்கு வரச் சொன்னான். அம்மாகிட்ட ‘பக்கத்து ஊர்ல இருக்குற பாட்டி வீட்டுக்குப் போறேன். நாளைக்குத்தான் வருவேன்’னு பொய் சொல்லிட்டு வேலூருக்கு வந்தேன். அவன் தங்கியிருந்த அரசு குடியிருப்புக்குக் கூட்டிட்டுப் போனான். அங்கே குடியிருக்கும் சிறைக்காவலர்கள்கிட்ட, ‘இவ என்னோட அத்தை பொண்ணு. ரெண்டு பேரும் லவ் பண்றோம். என்னைப் பார்க்கிறதுக்காக ஊர்லருந்து வந்திருக்கா’னு சொன்னான். அப்புறமா ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தான். குடிக்க கூல்டிரிங்க்ஸ் கொடுத்தான். அதைக் குடிச்ச பின்னாடி தலைசுத்தலா இருந்துச்சு. அரை மணி நேரத்துக்கு அப்புறம் கண்ணு முழிச்சுப் பார்த்தா, நான் டிரெஸ் இல்லாம நிர்வாணமா கெடந்தேன். என் பக்கத்துல அவனும் நிர்வாணமா படுத்திருந்தான். கூல்டிரிங்க்ஸ்ல போதை மாத்திரை கலந்து கொடுத்ததா ரொம்ப கூலா சொன்னான். சண்டை போட்டு அழுதேன். உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன். `அப்புறம் பார்க்கலாம்’னு சொல்லிட்டான். மனசு உடைஞ்ச நிலையில ஊருக்கு வந்துட்டேன்.

ரெண்டு நாள் கழிச்சு என் வாட்ஸ்அப்புக்கு ஒரு வீடியோ அனுப்பினான். அதுல, நான் மயக்கமா கிடந்தப்போ நிர்வாணப்படுத்தின காட்சியும், அவன் என்னை வன்கொடுமை செய்யுற கேவலமான காட்சியும் இருந்துச்சு. `திரும்பவும் வேலூர் வரலைன்னா, அந்த வீடியோவையெல்லாம் சோஷியல் மீடியாவுல விட்டுருவேன்’னு மிரட்டினான். எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலை. அவன் மிரட்டி கூப்பிடுற ஒவ்வொரு முறையும் அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வேலூர் போய் அவன்கூட இருந்தேன். ஒருகட்டத்துல, ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்க… இல்லைன்னா நான் காவலர் குடியிருப்பைவிட்டு வெளியே போக மாட்டேன்னு’ சொல்லி மறுத்துட்டேன். என்னை பயங்கரமா அடிச்சுட்டு அவன் டூட்டிக்குப் போயிட்டான். டூட்டி முடிஞ்சு வந்தவன், ‘உன்கூட மட்டுமா பழகினேன். என் லிஸ்ட்டுல நீ எத்தனையாவது பொண்ணுனு கணக்கு தெரியல. ஒழுங்கா ஊர்ப்போய் சேருடி’னு சொல்லி மிரட்டினான். பல பொண்ணுங்ககூட நெருக்கமாக இருக்கிற மாதிரியான போட்டோஸ், வீடியோஸ்னு செல்போன்ல வெச்சிருந்ததைப் பெருமையா காட்டினான். நிறைய பொண்ணுங்களை இப்படி ஏமாத்தியிருக்கான்னு அப்போதான் தெரிஞ்சது.

திடீர்னு போன மாசம் வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அம்மாவைக் கூட்டிக்கிட்டு அவன் ஊருக்குப் போய் நியாயம் கேட்டேன். அவனோட சொந்தக்காரங்க என்னை மிரட்டித் துரத்திட்டாங்க. பக்கத்துல இருக்கிற கலவை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ‘விஷயத்தைச் சொல்லி’ நடவடிக்கை எடுங்கனு சொன்னேன். அவன் ஜெயில் போலீஸா இருக்குறதுனால ஆக்‌ஷன் எடுக்கலை. ‘நீயும் விருப்பப்பட்டுத்தானே போனே… இதெல்லாம் சகஜம்’னு சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க.

அதுக்குப் பிறகு, அவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க விவரத்தைத் தேட ஆரம்பிச்சேன். அதுல ரெண்டு பொண்ணுங்ககிட்ட என்னால பேச முடிஞ்சுது. ஒரு பொண்ணு, பெங்களூரிலுள்ள ஒரு மருத்துவமனையில நர்ஸா இருக்காங்க. இன்னொரு பொண்ணு, ராணிப்பேட்டை மாவட்டத்துல இருக்கிற ஒரு காலேஜ்ல படிக்கிறாங்க. அவங்ககிட்டேயும் ஃபேஸ்புக் மூலமா பேசிப் பழகித்தான் தவறா நடந்திருக்கான். கணேஷ்குமார் மாதிரியான ஆட்களை வெளியில விட்டா இன்னும் பல பொண்ணுங்களோட வாழ்க்கை சீரழியும்’’ என்று தனக்கு நேர்ந்த கொடூரங்களைக் கொட்டித் தீர்த்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த சில ஆடியோ உரையாடல் பதிவுகளைக் கேட்டோம். அதில், ‘‘நான் ஜெயில்ல வேலை செய்யறேன். என் சொந்தக்காரங்க பல பேர் போலீஸா இருக்காங்க. சென்னையில இருக்குற பெரிய பெரிய ரௌடிகளையும் எனக்குத் தெரியும். ராதா, காக்காதோப்பு பாலாஜி, பினு… இவங்கல்லாம் என் ஆளுங்கதான். சொன்னா, தூக்கிருவானுங்க’’ என்று கணேஷ்குமார் மிரட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட மற்ற இரு பெண்களிடம் பேச முயன்றோம். ‘‘இப்போதான் இயல்புநிலைக்குத் திரும்பிக்கிட்டிருக்கோம். பழசையெல்லாம் கிளற வேண்டாமே…’’ என்றனர்.

வழக்கின் விசாரணை அதிகாரியான, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புனிதா, ‘‘பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிறைக்காவலர் கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆதாரங்களை அந்தப் பெண் எங்களிடம் ஒப்படைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

வந்தவாசி கிளைச்சிறை அலுவலர்களிடம் பேசியபோது, ‘‘விடுமுறையில் சென்ற கணேஷ்குமாரின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தில் சிக்கிய அவர்மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என்று போலீஸாரிடம் ஏற்கெனவே எங்கள் உயரதிகாரிகள் தெரிவித்து விட்டனர்’’ என்றனர்.

சிறைக்காவலர் குடியிருப்பில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது தொடர்பாக, வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதியிடம் பேசினோம். ‘‘கம்ப்ளெயின்ட் குறித்துக் கேள்விப்பட்டோம். அஃபிஷியல் கம்யூனிகேஷன் எனக்கு இன்னும் கிடைக்கலை. குற்றச்சாட்டுக்கு ஆளான கணேஷ்குமார் தலைமறைவாக இருக்கிறாரா என்றும் அஃபிசியலா தகவல் வரலை. போலீஸ் தரப்புல இருந்து சொன்னாங்கன்னா, நிச்சயமாக சம்பந்தப்பட்ட நபர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

புகார் குறித்து விளக்கம் கேட்க, சிறைக்காவலர் கணேஷ்குமாரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். போன் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. அவரின் தந்தை ரகுபதி மற்றும் உறவினர்கள் சிலரைத் தொடர்புகொண்டு அவர்கள் மூலம் பேச முயன்றோம். ‘‘கணேஷ்குமார் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. அந்தப் பெண் மீதும் தவறு இருக்கிறது’’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தனர்.

சிறைக்காவலர் குடியிருப்பிலேயே கொடுங்குற்றம் அரங்கேறினால், நீதிக்கு ஒரு பெண் எங்கே போவாள்? எத்தனை சட்டம் கொண்டுவந்து என்ன செய்வது… பாதுகாக்க வேண்டியவர்களே பாதகம் செய்தால்?

தாமதிக்கப்படும் நீதி… மறுக்கப்படும் நீதி!

ஏன் தாமதிக்கிறது காவல்துறை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here