தீப்பிடித்த கப்பலின் அருகில் எண்ணெய் கசிவு படலங்கள்: தாக்கத்தை குறைக்க இரசாயனப் பொருட்கள் விசிறல்!

கிழக்கு கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பலான எம்டி நியூ டயமண்ட் அருகே கடலில் டீசல் படலங்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை நேற்று (8) தெரிவித்துள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீயை அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, பாதகமான வானிலையிலும் வெற்றிகரமாக அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவிலான பகுதியில் டீசல் படிவு கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தீயணைக்கும் முயற்சியினால் கப்பலின் இயந்திர அறை கடல் நீரில் நிரம்பியிருந்தது. இயந்திர அறையின் அருகிலுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல், தீயணைக்க விசிறப்பட்ட தண்ணீருடன் கலந்து கப்பலிலிருந்து வெளியேறியிருக்கலாமென நம்பப்படுகிறது.

எனினும், கப்பலின் கச்சா எண்ணெய் சேமிப்பு பகுதி தீயில் இருந்து பாதுகாப்பாக உள்ளது என்றும், தற்போது கடலில் எண்ணெய் கசிந்தால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானம் நேற்று பிற்பகல் டீசல் படிவு காணப்பட்ட பகுதிக்கு பறக்கவிடப்பட்டது. விமானத்தில் இருந்து, டீசல் படிவுகளின் மீது இரசாயனங்கள் விசிறப்பட்டது. டீசல் படிவின் தன்மையை மாற்றி, கடலில் ஏற்படும் அபாயத்தை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒரு ஆராய்ச்சி குழு நேற்று காலை சேதமடைந்த கப்பலின் இடத்திற்கு கடல் நீர் மாதிரிகள் சேகரிக்கவும், கடல் சூழலில் தீயின் தாக்கத்தை அறியவும் சென்றது.

தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன், தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா), கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (எம்இபிஏ) மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு, தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடும். இது தவிர, மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ள நாராவின் கடல் ஆராய்ச்சி பிரிவும் அங்கு சென்றுள்ளது.

எண்ணெய்க் கப்பல் இப்போது சங்கமன்கந்தையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here