தியாகி திலீபனின் நினைவுநாளில் தமிழ் தலைவர்கள் நேரில் சந்திப்பு: ஒற்றுமை முயற்சி தீவிரம்!

தியாகி திலீபனின் நினைவுநாளில் தமிழ் கட்சிகளின் தலைவர்களை ஒன்றாக சந்திக்க வைக்கும் பகீரதப் பிரயத்தனங்கள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருகிறது.

புலிகளின் போராட்ட வழிமுறையை- அப்போது புலிகளிற்கு எதிர்முகாமில் இருந்த ஈ.பி.டி.பி போன்ற பல கட்சிகள் ஏற்கவில்லை. அப்போது புலிகளை ஆதரித்த கட்சிகள் எல்லாம் தமிழ் தேசிய கட்சிகள் என்ற பெயரை எடுத்து விட்டன உண்மையான அர்த்தத்தில் – இப்போது தமிழ் தேசிய கட்சிகள் யார் என ஒரு விரிவான விவாதத்தை நடத்தினால் பல பிம்பங்கள் உடையும். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கட்சியா, அதனால் துரோகிகள் என சுட்டிக்காட்டப்படும் தரப்புக்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிகளா என்ற சிக்கலான விவாதங்கள் எழும். நாம் இப்போது அந்த விவாதத்தை தவிர்த்து, தமிழ் தேசிய கட்சிகளாக தங்களை தாங்களே சொல்லிக் கொள்கின்ற கட்சிகள் தொடர்பாக இந்த செய்தியை தருகிறோம்.

புலிகளின் ஆயுதப் போராட்டத்தை விமர்சிக்கும்- புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களாலேயே, தியாகி திலீபனை கேள்வியெழுப்ப முடிவதில்லை. (புலிகளை விமர்சிக்கும் தகுதி தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளில் யாருக்கும் கிடையாதென்ற போதிலும், அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.

திலீபனின் உன்னத கனவுகளில் ஒன்று மக்கள் புரட்சி. ஆனால் திலீபன் மரணித்து- 38 வருடங்களாகி விட்ட போதும், அப்படியொரு சங்கதி தமிழ் சமூகத்திடம் நிகழவேயில்லை.

இப்பொழுது திலீபனின் நினைவுநாளில்- தமிழ் தேசிய கட்சிகளென தம்மைத்தாமே சொல்லிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க வைக்க பகீரத பிரயத்தனம் நடக்கிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிறிய கட்சிகளை ஒன்றாக சந்திக்க வைத்து- ஒன்றிணைந்த செயற்பட வைப்பதே ஏற்பாட்டாளர்களின் எண்ணம்.

தற்போதைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 3 கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ள தலைவர்கள் இந்த சந்திப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி- கஜேந்திரகுமார் அணி- வழக்கம் போல- ஆரம்பத்தில் பார்ப்போம், பின்னர் சந்திப்போம் பாணி பதில்களை வழங்கி வருகிறது. எனினும், சந்திப்பை இறுதி செய்யவோ, இரத்து செய்யவோ இல்லை. இந்த நிலைமையையிட்டு அச்சமடையவோ, மகிழ்ச்சியடையவோ முடியாது. ஏனெனில் முன்னணியின் அணுகுமுறையே இதுதான். கடைசி நிமிடம் வரை இழுத்து விட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் எல்லோரும் (வாயில் வரும் நாடொன்றை கூறி) அந்த நாட்டின் கைக்கூலிகள் என அடித்து விட்டு விடுவார்கள்.

இப்படி வறட்டு தேசியம் பேசிவரும் முன்னணி இப்போதைக்கு ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் போலவே தென்படுகிறது. மக்கள் அழுத்தம் ஏற்பட்டால் மாத்திரமே அந்த அணியை கட்டுக்குள் கொண்டு வரலாம். அல்லது, இப்போதைக்கு முன்னணி தவிர்ந்த மற்றைய கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசவுள்ளனர்.

இதன் முன்னோடியாகவே கட்சிகளின் இளைஞர் அணியினர் அண்மையில் நேரில் சந்தித்து கொண்டனர்.

இளைஞரணியின் சந்திப்பு பல கட்சிகளையும் நேரடியாகவே உற்சாகமடை வைத்துள்ளது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அந்த சந்திப்பு செய்தியை படித்ததும், மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதுடன், தமது இளைஞரணிக்கும் ஏன் தகவல் கொடுக்கவில்லை, ஒற்றுமை முயற்சியில் ரெலோ எப்பொழுதும் முன்னின்று செயற்படும், இனிமேல் எமது அணிக்கும் தகவல் கொடுங்கள் என கூறியிருந்தார்.

க.வி.விக்னேஸ்வரனும் சில வெளிப்படையான நிலைப்பாடுகளை வரும் நாட்களில் அதிரடியாக வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here