மனித வெடிகுண்டின் மரபணு பரிசோதனையை மீள நடத்த பணிப்பு!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கை (DNA) மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்தது.

குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் திங்கட்கிழமை (7) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதன் போது நீதிமன்றத்திற்கு சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரி என அறியப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயார் வருகை தந்திருந்தார். இதன் போது நீதிவான் நாளை (8) கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைத்து சென்று மரபணு பரிசோதனையை மீண்டும் பெற அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகளை இன்றைய தினம் தாக்கல் செய்து மீண்டும் சந்தேகநபரான தாயாரரை அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த கால விசாரணைகளிலட சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என மன்றில் அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இவ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் அவரது அம்பாறை- அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கடந்த ஜுலை (13) அதிகாலை கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் தற்போது அம்பாறை பொலிஸ் தலைமையக வாகன கராச் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருந்துள்ளார்.

இவரை சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலத்தினி உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொண்ட டி.என்.ஏ. மரபணு பரிசோதனையில் பொருந்தவில்லை என்ற நிலையில் அவர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுவந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவரது சிறிய தந்தையாரை கைது செய்த நிலையில் அவ்விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here