பாதையில்லையா? ஆசிரியர்களிற்கு மனமில்லையா?: புஸல்லாவையில் 6 பாடசாலைகளின் அவலம்!

புஸல்லாவை நகரிலிருந்து பொரட்டாசி தோட்டத்திற்கு காலை வேலையில் செல்லும் பஸ் போக்குவரத்து முறையான நேரத்திற்கு இன்மையால் இப்பகுதியிலுள்ள 06 பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் மற்றும் ஏனய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாணவர்கள் தனியார் வாகனங்களிலேயே புஸ்ஸல்லாவ நகரத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

இப் பிரதேசத்தில் உள்ள நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹெல்பொட வடக்கு தமிழ் மகா வித்தியாலம் மேமொழி தமிழ் வித்தியாலயம் அயரி தமிழ் மகா வித்தியாலயம், புரட்டொப் தமிழ் வித்தியாலயம், ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயம், கெமினிதன் தமிழ் வித்தியாலயம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் வரும் ஆசிரியர்கள் அதிபர்கள் சரியான போக்குவரத்து வசதி இன்மையால் பாடசாலைகளுக்கு காலை 09 மணி அளவிலேயே பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

காலை புஸ்ஸல்லாவ நகரத்திலிருந்து பெரட்டாசி பிரதேசத்திற்கு 7.30 மணியளவிலேயே தனியார் பஸ் தனது சேவையை ஆரம்பிக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 10 வருட காலமாக இல்லை.

ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலை விடுவதற்கு முன், பகல் 01.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பியும் விடுகின்றார்கள். காரணம் இந்த பஸ்சை விட்டால் அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும் தங்களது சொந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவற்றில் நேரத்திற்கு செல்கின்றனர். ஒரு ஆசிரியருக்கு தனது பாடசாலைக்கான சேவை நேரத்தில் நான்கு மணித்தியாலயங்கள் மாத்திரமே பாடசாலையில் சேவை செய்யக் கூடியதாக இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் வினவிய போது நாங்கள் எங்கள் பஸ் சேவையை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க ஆயத்தமாக உள்ளோம். ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. விட்டு விட்டு போகவும் முடியாது. இவர்கள் தங்கள் பிள்ளைகளை புஸ்ஸல்லாவ பிரதேச பாடசாலைகளில் விட்டுவிட்டே வருகின்றனர். அது வரைக்கும் காத்து நிற்க்க வேண்டும். எங்களுக்கும் அதிகமானவர்கள் பயணித்தால் தான் இலாபம் கிடைக்கும். பாதை அவலம் காரணமாக பஸ் அடிக்கடி உடைந்து விடுகின்றது. அதற்கும் செலவு செய்ய வேண்டும். மேற்படி பாடசாலைகளுக்கு எங்கள் பஸ்சில் செல்லாத சொந்த வாகனங்களில் செல்பவர்களும் பாடசாலைகளுக்கு அருகில் இருப்பவர்களும் இவர்கள் வரும் வரைக்கும் காத்திருந்து இவர்களுடனே செல்கின்றனர்.

அவர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தவணையில் இருந்தே காலை 7.30 பஸ் போகின்றது. இதற்கு முன்னர் பல வருடங்களாக காலை 8.15 க்கே பஸ் புறப்பட்டது. தற்போது நாங்கள் ஒரு படி முன்னேறி உள்ளோம். எங்களுக்கும் இந்த சமூகம் தொடர்பில் அக்கறை இருக்கின்றது. சிலர் செய்கின்ற குறைகளை பஸ் உரிமையாளர் எங்களை பாதிக்கின்றது. யாரும் எதுவும் கேட்டால் பஸ் லேட் என இலகுவாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர். தற்போதைக்கு 8 பஸ்கள் சேவையில் உள்ளது என்று கூறினர்.

மேற்படி பிரதேசங்கள் மிகவும் பாதிக்கபட்ட ஒரு கஷ்டபட்ட பிரதேசமாகும். இங்குள்ள மாணவர்கள் திறமையானவர்கள். நன்கு கல்வி கற்க கூடியவர்கள். பலர் பல்கலைகழகம் உட்பட தேசிய கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான முறையான களம் அமைக்கப்படுமானால் மேலும் இவர்கள் அபிவிருத்தியை நோக்கி செல்வர். இதற்கு பொறுப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

குறைபாடுகள் காரணமாக இப்பிரதேசதில் வாழும் தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளின் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்கள் அதிபர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியும் வருகின்றனர். இதை எந்த கல்விசார் ஆளனியினரும் கண்டுக் கொள்வதில்லை.

புஸ்ஸலாலவ நகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்தே மேற்படி தூர பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்கின்றனர். முன்னுக்கு உள்ள பாடசாலைகளுக்கு நேரத்திற்கு சென்றாலும் ரஸ்புரூக் பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்லும் நேரம் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களின் இந்த பிரச்சனைக்கு இந்த பாதை ஒரு பாரிய காரணமாக இருந்தாலும் தற்போது இந்த பாதையின் ஒரு பகுதி திருத்தப்பட்டு மிகுதியானவை செப்பனிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சரியான நேரத்திற்கான போக்குவரத்து வசதிகளை இவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது சம்பந்தபட்டவர்களின் கடமையாகும்.

காலை 7.00 மணிக்கு புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து பஸ் மேற்படி பிரதேசத்திற்கு செல்லுமானால் அதிபர்கள் ஆசிரியர்கள் நேரத்திற்கு பாடசாலை செல்லலாம். அதே போல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் பஸ் மீண்டும் புஸ்ஸல்லாவ வருமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் இதனை சம்பந்தபட்டவர்கள் செய்யாததினால் இந்த பிரச்சனை தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றது.

பாதையின் அவல நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கும் இந் நிலையே சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைக்கும் செல்கின்றனர். இவர்களுக்கும் இந் நிலையே. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவை தற்போது இல்லை.

இந்நிலைமை குறித்த கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ் வண்டிகள் வாங்கும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன் பாதை பழுதடைந்தையால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். இருந்தும் தற்போது பாதை செப்பனிடப்பட்டு வருவதால் உரிய நேரத்திற்கு செல்லக் கூடிய தனியார் அல்லது இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியும்.

கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளையே 05 முறை பாரிய பஸ் விபத்துக்கள் இடம் பெற்றன. இவ் வீபத்துக்களில் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு இதற்குறிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

-பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here