வீட்டில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தினேன்: நடிகை ராகிணி திவேதி பகீர் வாக்குமூலம்!

பெங்களூருவில், போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி திவேதி போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருளை வீட்டில் வாங்கி வைத்து பயன்படுத்தியதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெறும்.

கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, செனகல் நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர்- ராகிணியின் முன்னாள் காதலர் சிவபிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகிணி திவேதி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்யா ஆல்வாவுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு பதிலாக சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு இருப்பதாக அவர் கூறியதால், நேற்று முன்தினம் மாலையில் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் சித்தாபுராவில் உள்ள மகளிர் மையத்தில் வைத்து ராகிணி திவேதியிடம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களான அஞ்சுமாலா, புனித் ஆகிய 2 பேரும் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக ரவிசங்கருடன் சேர்ந்து எங்கு நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தினீர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். இதுதவிர விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் யாரெல்லாம் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்கள், போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் விசாரணைக்கு நடிகை ராகிணி திவேதி சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் தான் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகள் பற்றி தனக்கு தெரியாது என்றும், அதுபற்றிய விவரங்களை தான் மறந்து விட்டதாகவும் போலீசாரிடம் ராகிணி திவேதி தெரிவித்துள்ளார். என்றாலும், நேற்று காலையில் இருந்து நேற்று மாலை வரை நடிகை ராகிணி திவேதியிடம் போலீசார் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதன் காரணமாக இன்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் ராகிணி திவேதி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பார்களா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ராகிணி திவேதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தனது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவி சங்கருடன் நடிகை ராகிணி திவேதிக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை ராகிணி திவேதி போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய விசாரணையின் போது ரவி சங்கருடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை நடிகை ராகிணி திவேதி ஒப்புக் கொண்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் போதைப்பொருள் பழக்கம் எனக்கு கிடையாது என்றும், ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு கிளப், பப், ரெசார்ட் ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளின் போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ராகிணி திவேதி போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட சில போதைப்பொருட்களை அவர் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரவி சங்கர், ராகுல் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் இருக்கும், அதனை பயன்படுத்தி வந்தேன் என்றும், அதன்பிறகு, வீட்டில் அந்த போதைப்பொருளை வாங்கி வைத்து பயன்படுத்தியதாகவும் நடிகை ராகிணி திவேதி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு மட்டுமின்றி கோவா உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிகிறது. அதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பிற கும்பலுடன் நடிகை ராகிணி திவேதி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள், செல்போன்களை ஆய்வு செய்ததன் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிகிறது. என்றாலும், அதுபற்றிய முழுமையான தகவல்களை பெறுவதற்காக அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அதன் அறிக்கையை எதிர்பார்த்து போலீசார் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here