மன்னர் ஆட்சியை நோக்கியதாக இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறுகிறது: சட்டிக்காட்டுகிறார் கஜதீபன்!

மன்னர் ஆட்சியை நோக்கியதாக இலங்கையின் அரசமைப்பு மாற்றமடைகின்றதா என்ற அச்சம் இன்று எம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சியின் விடத்தற்பளை கிராமத்தில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலின் பின்னர் எது நடந்துவிடக்கூடாது என்று நாங்கள் மக்களை திரும்பத் திரும்ப எச்சரித்தோமோ அதுதான் இன்று வேகமாக இடம்பெற ஆரம்பித்துள்ளது. எமது மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தண்டிப்பதாக நினைத்து தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சிங்கள தேசிய கட்சிகளின் முகவர்களுக்கும் வாக்களித்தனால்தான் தமிழ் மக்கள் பாரிய சாவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் நான் தோற்றுப்போகலாம், ஆனால் நாங்கள் தோற்றுப்போகக் கூடாது என்று மக்களுக்கு திரும்பத் திரும்பச் சொன்னோம். ஆனால் அதை மக்கள் பெரிதும் பொருட்படுத்தவில்லை. ஏன் நாம் இதைச் சொன்னோம் என்பதை எமது மக்கள் இன்று புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடைய ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தமது தந்திரோபாயமான செயற்பாட்டால் வடக்கு கிழக்கில் தமது சிங்கள கட்சிகள் சார்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல அவர்களோடு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டிய தேவை இல்லை என்றும் அரசின் முக்கியஸதர்களான ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

சரி தவறுகளுக்கப்பால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பலத்தோடு உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே கண்டுகொள்ளக் கூடாது என்றால் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது நாம் சொல்லித்தான் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை.

நடைபெற்ற தேர்தலில் கோட்டபாய அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். ஆகவே தமிழர்களாகிய நாம் அனைவரும் ஓர் அணியில் ஒற்றுமைப்பட்டே ஆகவேண்டும் என்பதை தேர்தல் காலங்களில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதை மக்கள் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவுகள் தான் இவையெல்லாம். ஆட்சியில் இருப்பவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தமது தேவைகளுக்கு ஏற்றால்போல் அரசியலமைப்பை மாற்ற ஆரம்பித்துள்ளனர். இது ஒரு ஆரம்பம்தான். இதன் தொடர்ச்சி தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் கூறு போடும் என்பது நாம் சொல்லித்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.

எனவேதான் நாங்கள் எமது மக்களிடம் மீண்டும் உரிமையோடு கேட்கின்றோம். எங்களைச் சார்ந்தவர்களின் தேர்தலுக்கு முந்தையகால கருத்துக்கள் மீது உங்களில் யாருக்காவது அதிருப்திகள் இருந்திருக்குமேயானால் அவற்றையெல்லாம் ஒருபுறத்திலே ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய நிலையில் இனத்தின் நன்மை கருதி தேர்தல்கள் எப்படி உழைத்தீர்களோ அதைவிட அதிக உழைப்பை கொடுக்க முன்வாருங்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அறைகூவல் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here