எண்ணெய் கப்பலின் பணியாளர்களை கைது செய்ய சட்டமா அதிபரிடம் ஆலோசனை!

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்து எண்ணெய் டாங்கரான நியூ டயமண்ட் கப்பலின் கப்டன் மற்றும் பணியாளர்களை கைது செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை சுற்றுச்சூழல் அதிகாரசபை, வணிகக்கப்பல் செயலகம் என்பன கோரியுள்ளன.

சங்கமன்கந்தை கடற்பரப்பில் தீப்பிடித்த நிலையில், கரையை நோக்கி அடித்து வரப்பட்ட எண்ணெய் கப்பல் நேற்று மாலை, கரையிலிருந்து 40 கடல் மைலுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்டது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், முழுமையாக தீ அணைக்கப்படவில்லையென்பது நேற்று வெளியான காட்சிகளில் புலப்பட்டது. நேற்று மாலையும் தீயணைப்பு பணிகள் தொடர்ந்தன.

கப்பலின் கப்டன் மற்றும் குழு உறுப்பினர்கள் விதிமுறைகளையும் அவர்களின் கடமைகளையும் பின்பற்றத் தவறிவிட்டனர் என்ற அவதானிப்புகளுக்குப் பிறகு அவர்களை கைது செய்வதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல் செயலக பணிப்பாளர் நாயகம் ஏ.டபிள்யூ.செனவிரத்ன, தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட செலவுகளுக்கு காப்பீட்டைக் கோருவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரியதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கப்பல் கப்டன் மற்றும் குழுவினர் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கப்பலின் கொதிகலனை கண்காணிக்க தவறியது, சரியான நேரத்தில் நடவடிக்கையெடுக்க தவறிய குற்றச்சாட்டுக்களை கப்பன் கப்டன் எதிர்கொள்கிறார்.

காப்பீட்டு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வெஸ்ட் ஒஃப் இங்கிலாந்து காப்பீட்டு நிறுவனம் நான்கு பிரதிநிதிகளை கொழும்புக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.

இந்த குழு அடுத்த சில நாட்களில் கப்பலை ஆய்வு செய்ய உள்ளது.

கப்பல் கப்டன் இந்திய கடலோர காவல்படையின் கப்பலிலும், ஏனைய 20 பணியாளர்கள் இலங்கை கடற்படையின் கப்பலிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here