20வது திருத்தம் இராணுவ ஆட்சியை கொண்டுவரும்!

மில்லர் விளையாட்டு கழகத்தில் உயிர் நீத்த விளையாட்டு வீரர்களின் நினைவாக மட்டக்களப்பு கிண்ணையடியில் மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெறும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுறவுள்ளது.

பிரதேசத்தில் உள்ள 7 விளையாட்டுக் கழகங்கள் போட்டியில் பங்குபற்றுகின்றன.

இன்று இவ் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்ததுடன் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் உரையாற்றும்போது அவர் தெரிவித்ததாவது,
2020 ஆம் ஆண்டு தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கே ஒரு பேரிடியாக, சரிவாக இழப்பாக, நடந்து முடிந்துள்ளது. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவீர்ந்த பேரினவாத அரசிற்கு சாதகமான, சார்பான 5 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள அரசானது தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள், ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல, தங்களுக்கு சாதகமானவர்களையே தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள், இனப்பிரச்சினை தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை, என்ற வெற்றி மமதையில் உள்ளனர்.

இதேவேளை அமைச்சர்கள் சிலர் மாகாண சபை முறைமையைக் கூட ஒழிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இந்த மாகாண சபை முறைமை என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டது. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திற்கு ஆரம்ப புள்ளியாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையானது வடக்கு, கிழக்கு மக்கள் அனுபவித்த பலாபலன்களை விட தெற்கு மக்கள் அனுபவித்த பலா பலன்களே அதிகம். இதனால் தெற்கு மக்கள் இவ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தற்போது 19 ஆவது திருத்தசட்டத்தை நீக்கி 20 அவது திருத்த சட்டத்ததை கொண்டு வர வர்த்தமானியில் அறிவித்தல் விடுத்துள்ளனர். அந்த 20 ஆவது திருத்த சட்டம் ஒரு குடும்ப ஆட்சியை இராணுவமயமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஏதுவாக அமையப்பெறுகிறது.

எனவே மாகாண சபை முறைமையை தக்க வைக்க வேண்டுமானால் கிழக்கு மாகாண சபையை நாம் கைப்பற்ற வேண்டும்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்கள் பெற நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டி தேவை இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் எமக்கு கிடைத்த அடிப்படை புள்ளியான மாகாண சபை முறைமை உரிமை கூட எதிர்காலத்திலே இல்லாமல் போகும் நிலைமையும் எமது மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலைமை ஏற்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here