ஒரு இட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

ஒரு இலட்சம் கிலோமீட்டர் தூரம் வரையிலான வீதியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு உரிய அனைத்து வீதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய தெரிவுசெய்யப்பட்ட பிரதான வீதிகளை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதியை புனரமைப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று (4) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சு மற்றும் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வழிநடத்தலின் கீழ், மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும். இதன் கீழ் மாகாண சபைகளுக்கு உரிய வீதிகளில், பிரதான வீதிகள் இரண்டை இணைக்கும் வீதி, பிரதான நகரங்களுடன் தொடர்புபடும் வீதிகளான சிறப்பு வீதிகளும் இதன் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தும்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான முக்கியத்துவம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வீதி புனரமைப்பிற்கான முன்னுரிமை பட்டியலொன்றை நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் ஊடாக அவ்வப்போது வீதிகளை உடைப்பதற்கு பதிலாக, வீதி புனரமைக்கப்படும் வேளையில் நீர் வழங்கலுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகளை நிறைவுசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என அங்கு கூறப்பட்டது.

வீதி புனரமைப்பின் போது சுற்றாடல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அதன்போது வீதியின் இரு மருங்கிலும் நாட்டிற்கு ஏற்ற சுற்றாடலுக்கு பிரயோசனமான மரங்களை நடுவது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதற்கு விவசாய திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை ஆகிய நிறுவனங்களின் ஆலோசனை, ஒத்துழைப்பு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் அனைத்து கிராமங்களிலும் சுற்றாடல் குழுக்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் வீதியோரங்களில் நடப்படும் மரங்களின் பராமரிப்பு பணிகளை அந்த சுற்றாடல் குழுக்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் வழங்குவது உகந்ததாக அமையும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் வீதியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து வீதிகளையும் சிறந்த நிலைக்கு கொண்டுவரல், நிர்மாணத்துறையை மேம்படுத்துதல், கிராம மற்றும் நகர வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், மொத்த தேசிய வருமானத்தை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு முறையான அணுகலை வழங்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நிதியை மாத்திரம் உபயோகப்படுத்தி வீதிகள் காபட் செய்யப்படும். அந்த வீதிகள் ஊழல் மோசடிகள் இன்றி சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். வீதிகளை காபட் செய்வதற்கு முன்பாக வீதிகளில் நீர் குழாய், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட அரச மற்றும் மாகாண சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

-பிரதமர் ஊடக பிரிவு-
(பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சார்பாக)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here