கர்ப்பிணி பெண்களிலாவது கோட்ட அரசு இரக்கம் காட்டுமா?

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் முடிந்த கையோடு 60000 பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும். கடந்த பல ஆண்டுகளாக தொழில் தொடர்பில் கஷ்டங்களை எதிர்நோக்கிய  பட்டதாரிகளின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு மீண்டும் நன்றிகள் உரித்தாகுக.

ஆனாலும் பட்டதாரிகளுக்கான பயிற்சியாக 21 நாள் வதிவிட செயலமர்வு நிர்ணயிக்கப்பட்டிருப்பதானது பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்க வழிவகை செய்துள்ளது. நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ள பட்டதாரிகளில் 90% மேலான பெண்கள் திருமணம் முடித்தவர்களாவர்.

இவர்களில் அனேகமானோர் 5 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்குத் தாய்மார்களாகவும், பாலூட்டும் தாய்மார்களாகவும், குழந்தை பேற்றுக்கு தயாரான நிலையிலும், குழந்தை பேற்றுடன் கூடியவர்களாகவும், கருத்தரித்த நிலையிலுமே காணப்படுகிறார்கள்.

இவ்வாறான தாய்மார்களுக்கு இராணுவ பயிற்சி முகாம்களில் வழங்கப்பட இருக்கின்ற 21 நாள் வதிவிட செயலமரவானது பொருத்தமானதுதானா? என அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் நேற்று இரவு மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

தாய்மார்களுக்கு இராணுவ பயிற்சி முகாம்களில் வழங்கப்பட இருக்கின்ற 21 நாள் வதிவிட செயலமரவானது பொருத்தமானதுதானா? என அரசாங்கம் சிந்திக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் பட்டதாரி மாணவர்களாக  பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் அல்லர். மாறாக இந்த நாட்டிலும் சமூகத்திலும் குடும்பப் பொறுப்புகளை சுமந்து கொண்டுள்ள தாய்மார்கள். அவர்களுக்காக குடும்பத்தில் பல கடமைபாடுகள் இருக்கின்றன. 21 நாள் காலப்பகுதிக்கு இவர்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கின்ற போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

1) தத்தமது குழந்தைகளை பிரிந்து 21 நாட்கள் பயிற்சி முகாம்களில் வதிவிட பயிற்சியில் இருக்கும் போது உளவியல் தாக்கங்களுக்கு தாய்மார்கள்  உட்படலாம், 21 நாட்கள் தாயைப் பிரிந்து இருக்கின்ற சிறு குழந்தை மன அழுத்தங்களுக்கு உட்பட்டு எதிர்காலத்தில் வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகலாம், பாலூட்டும்தாய் குழந்தை பிரிவானது நினைத்துப் பார்க்கும்போது வேதனையானது.

குழந்தைப் பேற்றுக்கு தயாரான நிலையில் உள்ள நிறைமாதக் கர்ப்பிணிகள் செயலமர்வுக்கு உள்வாங்கப்படுகின்றமை பொருத்தமற்றதாகும், கருத்தரித்த நிலையில் உள்ள பெண்களும் உள்வாங்கப்படுகின்றமமை  பேராபத்து மிக்கதாகும், குழந்தை பெற்ற நிலையில் உள்ள தாய்மார்கள்கூட பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டமையானது விதிமுறைகளுக்கு மாற்றமானது .

ஆகவே இவ்வாறான நிலைகளை கருத்தில் கொண்டு எதிர்கால சந்ததியினுடைய வளமான எதிர்காலத்தையும் மன அழுத்தங்களுக்கு உட்படாத  குழந்தை பாசத்துடனான வாழ்க்கை முறையையும் கவனத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்  இந்த வதிவிடப் பயிற்சி நெறி என்ற நிலையில் இருந்து நீங்கி  சில சலுகைகளை செய்ய முன்வர வேண்டும்.

குறிப்பாக தாய் சேய் நலனை கருத்தில் கொண்டு, அது வதிவிட பயிற்சி நெறி அல்லாது குறித்த தளத்துக்கு வந்து வீடு செல்லுகின்ற பயிற்சி முறையாக அது அமையப் பெறவேண்டும் என்பது தொழிலை பெற்றுக் கொண்டுள்ள பட்டதாரி தாய்மார்களின் வேண்டுகோளும் விண்ணப்பமும் ஆகும்.

மாத்திரமல்லாது, சிறு குழந்தைகளை கொண்டுள்ள தாய்மார்கள்,  குழந்தை பேற்றுடன்  கூடிய தாய்மார்கள், கருத்தரித்த தாய்மார்கள், நிறைமாத  கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கான இலகுபடுத்தல்  நடைமுறைகளும் கை கொள்ளப்படல் வேண்டும் . இந்தச் செய்தியினை கௌரவ  பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர்நிலை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குறித்த வதிவிட பயிற்சி நெறியினை தினந்தோறும் வீடு வந்து செல்லும் பயிற்சியாக  இலகுபடுத்தி கொடுப்பதற்கு முன்வாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here