சட்டவிரோத மீன்பிடி முறைகளை உடனே தடைசெய்யுங்கள் : ஈ.பி.டி.யிடம் மட்டக்களப்பு மீனவர்கள் அவசர கோரிக்கை!

மட்டக்களப்பு கல்லடி, திருச்செந்தூர், டச்பார், நாவலடி ஆகிய கிராம மீனவர்கள் ஒன்றிணைந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை சந்தித்து அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் மட்டக்களப்பு மாணநகர சபை உறுப்பினருமான சிவானந்தராஜாவுக்கும் குறித்த பிரத மீனவர்களுக்குமிடையே இன்று காலை 10.00 மணியளவில் கல்லடி கடற்கரைப்பகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், சுருக்குவலை போன்ற தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது பற்றி பலமுறை முறைப்பாடு செய்தும் தமது பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லையென்றும், இதனால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வை பெற்றுத்தருமாறும் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாவட்ட அமைப்பாளர், இது சம்மந்தமாக தொடர்புடைய அதிகாரிகளோடும், எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடும் பேசி சிறந்த தீர்வொன்றை விரைவாக பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச இணைப்பாளர் சிறீமுருகன், கட்சியின் மீன்பிடி தொடர்பான மாவட்ட ஆலோசகர் அரசரெட்ணம், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here