கரையை நோக்கி அடித்து வரப்படும் எண்ணெய் கப்பல்: தற்போது 22 கடல் மைலில்!

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து எம்டி நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்திய கடலோர காவல்படை கப்பல் ‘சாரங்’, எண்ணெய் கப்பல் தீப்பற்றியுள்ள பகுதிக்கு மீட்பு நடவடிக்கைக்காக வந்துள்ளது. இது பிரத்யேக தீயணைப்பு கருவிகளைக் கொண்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் மற்றும் கடலில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவர்கள் இன்று மாலை மற்றொரு இந்திய கடலோர காவல்படை கப்பலுடன் சம்பவ இடத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசர விஷயமாகக் கருதி, இலங்கை துறைமுக அதிகாரசபை, ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகக் குழு, கொழும்பு கப்பல்துறை லிமிடெட், சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஓயில் கார்ப்பரேஷன் ஆகியவை தீயை அணைக்கும் இரசாயனங்களை வழங்கியுள்ளன.

‘சமுத்ரக்ஷா’, ‘சமரக்ஷா’ மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் ‘சமுதுரா’ மூலம் இந்த இரசாயனங்கள் எண்ணெய் கப்பல் மீது விசிறப்படவுள்ளது.

தற்போது, ​​இலங்கை விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகொப்டர் மற்றும் பல கப்பல்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

நீரோட்டம் காரணமாக எண்ணெய் கப்பல் இலங்கை கரையை நோக்கி அடித்து வரப்பட்டு கொண்டிருக்கிறது.

தற்போது இலங்கை கரையிலிருந்து 22 கடல் மைல் (35 கிலோமீற்றர்) தொலைவில் உள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததும், கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here