எரியும் கப்பலின் காலை நிலவரம்!

இலங்கையின் கிழக்கில் சங்கமன்கந்தையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது தீப்பிடித்த எம்டி நியூ டயமண்ட் என்ற எண்ணெய் டேங்கர் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர் கொதிகலன் வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.

எண்ணெய் டேங்கரின் பிரதான எஞ்சின் அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை தற்போது இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகொப்டர் நேற்று சூரிய அஸ்தமனம் வரை பல வான்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டது. வானிலிருந்து எரியும் கப்பலிற்கு தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் பீச் கிராப்ட் கண்காணிப்பு விமானம் அவ்வப்போது விமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானமும் கண்காணிப்பில் ஈடுபட்டது.

மேலும், இந்த பேரிடர் மேலாண்மை நடவடிக்கையில் இலங்கை கடற்படைக் கப்பல்கள் சயுரா, சிந்துரால மற்றும் ரணரிசி 02 துரித தாக்குதல் கலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று மாலை விபத்து பகுதிக்கு வந்த இந்திய கடலோர காவல்படை கப்பல் Sahyadri, இலங்கை கடற்படைக் கப்பல் ‘சிந்துராலா’வுடன் இணைந்து, எரியும் கப்பலின் இருபுறமிருந்தும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

அதிகாலை 1.00 மணி மற்றும் அதிகாலை 3.00 மணிக்கு ‘ராவணன்’ மற்றும் ‘வசம்ப’ ஆகிய இரண்டு கப்பல்களும் தீயணைப்பு பணிில் இணைந்தன. இன்று அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து இவை புறப்பட்டு சென்றன.

அதிகாலை 2.00 மணியளவில் ஏ.எல்.பி ‘விங்கர்’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு சொந்தமாக கப்பலும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டது.

இது தவிர, இந்திய கடற்படை கப்பல் (ஐ.என்.எஸ்) ‘சஹ்யாத்ரி’ இன்று அதிகாலை 2.00 மணியளவில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கையில் இணைந்தது. இன்றைய (04) பிற்பகலில் மேலும் இரண்டு பிற இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இந்த நடவடிக்கையில் சேர திட்டமிடப்பட்டுள்ளது. பேரழிவு நிவாரண நடவடிக்கையில் பங்கேற்ற இரண்டு ரஷ்ய கப்பல்களும் நேற்று மாலை தேவையான ஆதரவை வழங்கின.

இதற்கிடையில், கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 21 பேரை மற்றொரு கப்பலான எம்.வி.ஹெலன் இல் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காயங்களைத் தொடர்ந்து கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கப்பலின் மூன்றாவது பொறியியல் அதிகாரியின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது.

எண்ணெய் டேங்கரில் இருந்த 23 பணியாளர்களில் 22 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் கொதிகலன் வெடிப்பில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டு தீயினால், சேமித்து வைக்கப்பட்டுள்ள 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த கச்சா எண்ணெய் சேமிப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், இந்த பேரழிவு காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் கசிவு ஏற்படக்கூடிய அபாயத்தைத் தணிக்கவும் நிர்வகிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, எண்ணெய் டேங்கர் இப்போது 3100 மீட்டர் ஆழமான கடலில் உள்ளது. கரையிலிருந்து சுமார் 25 கடல் மைல் (சுமார் 50 கி.மீ) தொலைவில் தரித்துள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, இலங்கை கடற்படையின் 03 முக்கிய கப்பல்கள், 02 வேகத்தாக்குதல் படகுகள், 01 இந்திய கடலோர காவல்படை கப்பல், 01 இந்திய கடற்படை கப்பல் மற்றும் 03 கப்பல்கள் எரியும் கப்பலிற்கு அருகில் உள்ளன.  அதிகாலை 5.30 மணி முதல் தீயணைப்பு விமானம் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கப்பலின் பின்புறத்தில் உள்ள சூப்பர் ஸ்ட்ரக்சர் இன்னும் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

கப்பலின் கட்டமைப்பை ஆய்வு செய்த பின்னர், கப்பலின் கிரேக்க கப்டனின் ஆலோசனையுடன் கடல் தீயணைப்பு நிபுணத்துவம் வாய்ந்த கடற்படை குழுக்களால் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here