கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் சிறீதரன் எம்.பி கடிதம்!

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு சிறீதரன் எம்.பி அனுப்பியுள்ள கடிதம் இது.

திரு.இ.இளங்கோவன்
செயலாளர்,
கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,
வடக்கு மாகாணம்,
செம்மணி வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 10 ஆண்டு காலத்தில் பெரும்பாலானோரின் பேசு பொருளாகவும், அண்மையில் நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் தொனிப்பொருளாகவும் ‘கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை வீழ்ச்சி’ அமைந்திருந்ததை தாங்களும் அறிவீர்கள்.

போர்ச்சூழல், வளப்பற்றாக்குறைகள், பொருளாதாரத் தடை, ஆளணிப் பற்றாக்குறை என்பவற்றை எல்;லாம் ஒரு சேர எதிர்கொண்ட போதும் கல்வியில் முன்னிலை வகித்த கிளிநொச்சி மாவட்டம் போர் முடிந்து, நாம் மீளக் குடியேறி 10 ஆண்டுகள் நிரம்பிய நிலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பெருமளவான வசதிகளும், வளத்தேவைகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதன் பின்னரும் இலங்கையில் இருபத்தைந் தாவது மாவட்டமாகவும், வடக்கிலுள்ள 12 கல்வி வலயங்களில் 10வது கல்வி வலயமாகவும் தொடர்ந்தும் கடை நிலையிலுள்ளதாக கருதப்பட்டுவரும் நிலையில், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இவ்விடயம் தொடர்பிலான கீழ்வரும் வினாக்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

1. கிளிநொச்சி மாவட்டக் கல்வி நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆண்டு ரீதியான வளர்ச்சிப் போக்கு மற்றும் பின்னடைவுகளின் உண்மையான நிலை என்ன?

2. மாணவர்களின் திறன்களை அளவீடு செய்வதற்காகப் பின்பற்றப்படும் தேர்வுமுறைப் பெறுபேறுகளின் படி மேற்கொள்ளப்படுகின்ற ஒப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் மட்டும் எமது மாவட்டத்தின் கல்வி கடைநிலையிலுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதா?

3. தேசிய ரீதியாக வகுக்கப்பட்ட கல்விக்கொள்கையை வடக்குமாகாணத்தில் அமுல்ப்படுத்துவதால் மாணவர்களின் அடைவுமட்டம் பாதிக்கப்படுகின்றதா? அவ்வாறில்லாவிடின் தேசியரீதியில் வகுக்கப்பட்ட கல்விக்கொள்கை வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி உளவியலுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளதா?

4. போரும், அதன்போதான இழப்புக்களும், உடல், உளரீதியான தாக்கங்களும் போருக்குப் பிந்திய காலப்பகுதியிலான மாணவர்களின் கல்விநிலையில்;;;; தாக்கம் செலுத்துகின்றதா?

5. எமது மாவட்டத்தின் கல்வித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதும், அதிகரித்த அரசியற் தலையீடுகள் காணப்படுவதும் கல்வித்துறையின் பின்னடைவுக்குரிய காரணங்களுள் ஒன்றாக சொல்லப்படுகின்ற நிலையில் இக் குற்றச்சாட்டு உண்மைத்தன்மையானது தானா?

6. பெருமளவிலான பாடசாலைகளின் அடிப்படை வசதிகளும், திறன் வகுப்பறைகள்இ விஞ்ஞான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அப்பாற்பட்ட நவீன கல்வி முறைமைகளும் புகுத்தப்பட்டதன் பின்னரும் கல்விநிலையில் எம்மால் முன்னேற்றம் அடைய முடியவில்லை எனின் கல்வித்துறை வீழ்ச்சிக்கு இந் நவீன தொழினுட்ப வசதிகளும் காரணமாகின்றதா?

7. விளையாட்டு மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளதா? கல்வியில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் பிரகாசிக்கக் கூடிய வகையில் மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் ஆற்ற வேண்டியுள்ள பணிகளும், பங்களிப்பும் என்ன?

8. தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் கல்வி நிலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றது என்ற கருத்து நியாயப்பாடுடையதா? அவ்வாறெனின் அதற்குரிய தீர்வு என்ன?

9. பௌதீக வளப்பற்றாக்குறைகள், சமனற்ற ஆசிரிய வளப்பங்கீடு, நிரப்பப்படாத ஆளணி வெற்றிடங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்களாக அமைகின்ற பட்சத்தில் அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய எளிய வழிவகைகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் என்ன?

10. கிளிநொச்சி மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமது மாவட்டத்தின் கல்வி நிலை வளர்ச்சிக்காக, மாணவ சமுதாயத்தின் எதிர்கால நலனுக்காக என்னுடைய அதிகார வரம்புக்கும், இயல்தகைமைக்கும் உட்பட்டு எனது வகிபாகம் எவ்வாறிருக்க வேண்டுமென்று கல்விப்புலம் சார்ந்தோரின் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது?

எனவே, எமது மாவட்டத்தின் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, புலமைசார் நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி, அக்குழுவின் ஊடாக மேற்குறித்த விடயங்களையும் உள்ளடக்கியதான முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு, உண்மையும், வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் மிக்க அறிக்கை ஒன்றை தயார்செய்து வெளியிடுவதன் மூலம், அதனை அடிப்படையாகக் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை வளர்ச்சி நோக்கி கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் தாங்கள் முழுமையான கரிசனையோடு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இங்ஙனம்,
மக்கள் பணியிலுள்ள,

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

படிகள்

1. கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இணைத்தலைவர் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு
2. கௌரவ.பீ.எச்.எம்.சாள்ஸ், வடக்குமாகாண ஆளுநர், ஆளுநர் செயலகம், யாழ்ப்பாணம்
3. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், கிளிநொச்சி
4. மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம்
5. அற்புதராஜா, பீடாதிபதி, பொறியியற் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அறிவியல்நகர், கிளிநொச்சி
6. திரு.இரத்தினம் சர்வேஸ்வரா, விரிவுரையாளர் – கல்வியியற்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
7. திரு.செல்வின் இரேனியஸ், சிரேஸ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி (ஓய்வுநிலை)
8. வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி
9. கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி அலுவலகம் – கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி
10. கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பெறுவதற்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here