மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகும் வன அலுவலர்: சிங்கராஜ வனத்தை பாதுகாக்க தனது காணியை வழங்குவதாக அறிவித்தார்!

சில மாதங்களின் முன்னர் சமூக ஊடகங்களில் வைரலாக கம்பஹா மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் தேவானி ஜெயதிலக, மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

அண்மையில் சர்ச்சைக்குள்ளான சிங்கராஜ வனத்தை பாதுகாக்க அவர் ஒரு மாற்றுத்திட்டத்தை வெளியிட்டதையடுத்து, சிங்கள சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

கேகாலையில் தனக்கு சொந்தமான உள்ள காணியை லங்காகம பகுதியில் குடியிருக்கும் ஒருவருக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

சிங்கராஜ வனப்பகுதியை ஊடறுத்து சர்ச்சைக்குரிய வீதி அபிவிருத்தி திட்டத்தை இராணுவம் அண்மையில் ஆரம்பித்தது. இதனால் இயற்குசூழலிற்கு ஏற்படும் பாதிப்பை, சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், லங்காகம பகுதியில் குடியிருக்கும் மக்களிற்கு பாதை அவசியம், அதனால் சர்ச்சைக்குரிய பாதை திட்டத்தை தொடருங்கள் என கோட்டாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், லங்காகம பகுதியில் குடியிருக்கும் ஒருவருடன் தனது காணியை பரிமாறிக் கொள்ள தயாராக இருப்பதாக, கம்பஹா மாவட்ட வனவளப்பாதுகாப்பு அதிகாரி தேவானி ஜெயதிலக தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

தனது காணி லங்காகம பகுதி வாசிக்கு வழங்குவதன் மூலம், அவர் லங்காகமவை விட்டு வெளியேறலாம். அவரது காணி சிங்கராஜ வனத்துடன் இணைக்கப்பட்டு, வனம் பாதுகாக்கப்படும் என தேவானி விளக்கமளித்துள்ளார்.

இப்படி காணியை பரிமாறிக்கொள்ள விரும்புபவர்களிற்கும் அழைப்பு விடுத்துள்ளார். கேகாலையிலுள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய காட்டை உருவாக்க விரும்பியிருந்ததாகவும், தற்போது லங்காகம குடியிருப்பாளர் ஒருவருடன் பரிமாறிக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பலரும் வரவேற்று, பகிர்ந்து வருகிறார்கள்.

தேவானி ஜெயதிலக சமூக ஊடகவாசிகளிற்கு நன்கு பரிச்சயமானவர். மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய இராஜாங்க அமைசசர் சனத் நிஷாந்த, 52 நாள் அரசாங்கத்தில் நீர்கொழும்பிலுள்ள சதுப்பு நிலத்தை கட்டுமான திட்டமொன்றிற்கு வழங்க முடிவெடுத்தபோது, பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக எதிர்த்தார்.

அந்த காணொளி வெளியாகி இலங்கை முழுவதும் அவர் கொண்டாடப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here