பிரபாகரனுடன் நேரடி சந்திப்பிற்கு மஹிந்த விரும்பினார்: சொல்ஹெய்ம் தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற சமாதான பேச்சின்போது, அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்ததாக, நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரே இலங்கைக்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு அதிகாரம் வழங்க மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்தார். முற்றிலும் திறந்தநிலை உச்சிமாநாடு ஒன்றை நடத்தி ஒரே இலங்கைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திற்கு இணங்க முடியும் என மஹிந்த எம்மிடம் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை புலிகளும் ஏற்றுக்கொள்வார்கள் என மஹிந்த எம்மிடம் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், யுத்த வலயத்தில் சிக்கிய பொதுமக்களையும், புலிகளின் உறுப்பினர்களையும் கப்பல்கள் மூலம் வெளியேற்ற நோர்வே தயாராக இருந்தது. ஒவ்வொரு பொதுமகனையும், புலிகளையும் பதிவு செய்து இலங்கையின் பிற பகுதிக்கோ அல்லது வெளிநாடொன்றிற்கோ கொண்டு செல்லலாம் என்ற வாய்ப்பை வழங்கினோம். பிரபாகரன் அதை நிராகரித்தார்.

இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களிற்கு இந்தியா தயாராக இருந்தது. எனினும், 2008 செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் பிரச்சனையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்கலாமென இந்தியாவின் நிலைப்பாடு மாறியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here