‘குற்றவாளிக்கு விளக்கமளிக்க மாட்டேன்’: விளக்கம் கேட்ட துரைராசசிங்கத்திற்கு உறுப்பினர் அனுப்பிய கடிதம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றினால் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருள்ளதாக தகவல்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றிலேயே மோசமான- வினைத்திறனில்லாத செயலாளர் என்ற எதிர்மறையான பெருமையை பெற்றுவிட்டார் கி.துரைராசசிங்கம். சொந்த மாவட்டத்திலேயே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

தேசியப்பட்டியல் விவகாரத்தில், இரண்டரை வருடம் உங்களிற்கும் நியமனம் தரலாம் என சொல்லப்பட்ட ஆசை வார்த்தையை நம்பி, கட்சிக்க எதிராகவே சதி மேற்கொண்டு, அம்பாறையை சேர்ந்த கலையரசனை தேசியப்பட்டியலிற்கு நியமனம் செய்தார்.

சாதாரண இந்த வாக்குறுதிக்கே மயங்குபவர், நாளை மஹிந்த தரப்பு உங்கள் வங்கி கணக்கிலக்கத்தை தாருங்கள் என்றால், கட்சியையே எழுதிக்கொடுத்து விடுவார் என பின்னர்தான் சுதாகரித்த கட்சி பிரமுகர்கள், துரைராசசிங்கத்தை தூக்கியெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அவர் குற்றவாளி. அரசியல் செயற்குழுவிலும், மத்தியகுழுவிலும் அவரை குற்றவாளியாக்கும் இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மத்தியகுழுவில் அவரது தலை உருண்டிருக்கும். எனினும், சுமந்திரனின் உதவியினால் தற்காலிகமாக தப்பிப்பிழைத்திருக்கிறார். எனினும், பொதுச்சபையில் அவர் தப்பிக்க வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

மத்தியகுழுவில் துரைராசசிங்கத்தை காப்பாற்ற சுமந்திரன் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது, இந்த சதி முயற்சியின் பின்னணி குறித்து கட்சி பிரமுகர்களிற்கு தெளிவான விளக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஓரிரு தினங்களின் முன்னர் கட்சியின் இளைய உறுப்பினர் ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கும் அறிவித்தலை அனுப்பிய செயலாளர், அது குறித்த விளக்கத்தை எழுத்து மூலம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த உறுப்பினர் இரண்டு வரியில் பதில் அனுப்பியதாக தகவல். “குற்றவாளிகள் எங்கும் நீதிபதிகளாக இருப்பதில்லை. நான் குற்றவாளியொருவருக்கு விளக்கமளிக்க தயாராக இல்லை“ என்பதே அந்த கடிதம்!

அனைத்து விடயங்களையும் ஊடகச்சந்திப்பு மூலம் பகிரங்கப்படுத்தும் நிலைமை தமிழ் அரசு கட்சிக்குள் உருவாகி வருவதால், இந்த கடிதத்தை எழுதியவரும் விரைவில் ஊடகச்சந்திப்பை நடத்தி, அறிவித்தல் விடுவார் என நம்பலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here