12.5 கோடி ரூபாவை யாரும் காரணமில்லாமல் விட மாட்டார்கள்; சிஎஸ்கே என் குடும்பம்; மீண்டும் வருவேன்: மனம் திறக்கும் ரெய்னா

தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் 2020-லிருந்து சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்து இந்தியா சென்று விட்டார். இந்நிலையில் ‘மீண்டும் சென்னை அணியில் என்னை பார்க்கலாம், சிஎஸ்கே என் குடும்பம் போன்றது’ என்று தெரிவித்துள்ளார்.

தோனிக்கு அளித்தது போலவே பால்கனியுடன் கூடிய அறை தனக்கு வேண்டும் என்று கேட்டதாகவும், பிறகு கொரோனா அச்சமும் அவருக்கு இருந்ததாகவும் அதனால் அவர் ‘சொந்தக் காரணங்களினால் அவர் நாடு திரும்பினார்’ என்று கூறப்பட்டது.

பிறகு என்.சீனிவாசன் முதலில் ரெய்னா விலகல் குறித்து சற்றே காட்டமாகக் கூறியதாக வந்த செய்திகளை அடுத்து அவரே பிற்பாடு விளக்கமளிக்கையில் ரெய்னா கிரேட் பிளேயர், சிஎஸ்கேவுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது, அவர் சிஎஸ்கே குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த வீரர் குறித்தும் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் வீரர்களை மதிப்பவர் என்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

இந்நிலையில் கிரிக்பஸ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் அங்கிருந்து வந்தது என் சொந்த முடிவு. என் குடும்பத்துக்காக வர வேண்டியதாயிற்று. என் குடும்பம் சம்பந்தமாக ஒரு விஷயம் தீர்க்கப்பட வேண்டியிருந்தது, சிஎஸ்கேயும் என் குடும்பம்தான். மாஹி பாய் (தோனி) எனக்கு மிக முக்கியம். நான் எடுத்தது கடினமான முடிவு.

எனக்கும் சிஎஸ்கேவுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. யாரும் 12.5 கோடி ரூபாயை விட்டு விட்டு திடமான காரணமில்லாமல் போகமாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் நான் இன்னும் இளமையானவன் தான். அடுத்த 4-5 ஆண்டுகளுகு நான் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதை எதிர்நோக்குகிறேன்.

(என்.சீனிவாசன்) எனக்கெல்லாம் அவர் தந்தையைப் போன்றவர். அவர் எப்பவும் என் பக்கம் நின்றிருக்கிறார், என் மனதுக்கு நெருக்கமானவர். அவர் கூறியது அந்த கூற்றிடச் சூழலிலிருந்து பிரித்து எடுத்து அர்த்தம் கொள்ளப்பட்டது. அவர் என்னை தன் இளையமகன் போல்தான் நடத்துவார். தந்தை மகனை திட்டக் கூடாதா? அவர் அப்படிக் கூறினார் என்றால் நான் அங்கிருந்து கிளம்பிய உண்மையான காரணம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று பொருள். அதன் பிறகு அவருக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினார். நானும் அவரும் பேசினோம், சிஎஸ்கேயும் நானும் இதை இத்தோடு விட முடிவெடுத்து விட்டோம்.

நான் இங்கு தனிமையில் இருக்கும் போதும் கூட பயிற்சியில் இருந்தேன், மீண்டும் என்னை நீங்கள் அணியில் பார்ப்பீர்கள்.

எனக்கு குடும்பம் உள்ளது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? என் குடும்பம் எனக்கு மிக முக்கியமானது. இந்த கடினமான காலத்தில் அவர்கள் மீது நான் அக்கறை செலுத்தியாக வேண்டும். என் குழந்தைகளை பார்த்து 20 நாட்கள் ஆகின்றது. இங்கு வந்த பிறகு தனிமையில் இருப்பதால் குழந்தைகளைப் பார்க்கவில்லை.

பதான்கோட்டில் என் மாமா கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பயங்கரமானது, என் குடும்பத்தில் அனைவரையும் நிலைகுலையச் செய்து விட்டது. அவர்களைப் பார்த்துக் கொள்வது என் பொறுப்புதானே. ஆனால் தனிமையில் இருப்பதால் அவர்களையும் பார்க்க முடியவில்லை. என் பெற்றோர், என் மாமா குடும்பத்தினர் பெரிய வேதனையில் இருப்பார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும்.

சிஎஸ்கே அணியில் கோவிட் பரவல் என்னை மிகவும் பாதித்தது. இது கொலைகார நோய், இத்தனை முன்னெச்சரிக்கையும் தாண்டி அது தொற்றியுள்ளது என்றால் அது எவ்வளவு மோசமான தொற்று என்பது புரிகிறது. அனைவரையும் அது தொற்றும். விரைவில் அனைவரும் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் சுரேஷ் ரெய்னா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here