மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றம்: மலிங்க திடீர் விலகல்; ஆஸி.யின் முக்கிய வீரர் ஒப்பந்தம்!

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்கவுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

அணியின் திருப்புமுனை பந்துவீச்சாளராக இருந்த மலிங்க இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பினும், ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் வருகை, அந்த அணிக்கு வலு சேர்க்கும்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ”ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்க தெரிவித்துள்ளார். அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸி.யின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட செய்தியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் ஜேம்ஸ் பட்டின்ஸனை வரவேற்கிறேன். மலிங்கவுக்குத் தேவையான ஆதரவை அணி நிர்வாகம் வழங்கும். எங்களுக்குப் பொருத்தமானவராக பட்டின்ஸன் இருப்பார், எங்களின் வேகப்பந்துவீச்சு வலுப்பெறும், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்குச் சிறப்பாக இருக்கும்.

லசித் லெஜெண்ட் வீரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். இந்த சீசனில் லலித் மலிங்கவை நாங்கள் இழக்கிறோம் என்பது வருத்தம்தான், அதுதான் உண்மை. இந்த நேரத்தில் லசித் அவரின் குடும்பத்தாருடன் இலங்கையில் இருப்பது அவசியம் என நம்புகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களின் நலன், அவர்களின் குடும்பத்தாரின் நலனில் அதிகமான அக்கறை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தங்கள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் மலிங்க இடம் பெற்றார். ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here