வாழ்நாள் மூழுவதும் தண்ணீருக்காக போராடும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாசிவன்தீவு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் வருடம் முழுவதும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கே எட்டு கிலோமீற்றர் தொலைவில் கிழக்கே கடலும் தெற்கு வாழைச்சேனை ஆறும் மேற்கு மயிலம்கரைச்சை ஆறும் வடக்கு வட்டவான் ஆற்றினாலும் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட கிராமமே நாசிவன்தீவு கிராமமாகும்.

இக்கிராமத்தில் 435 குடும்பங்களில் 1302 நகபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 320 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், 877 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு தென்னை, பணை மற்றும் கண்டல் தாவரங்கள் அமைந்த ஒரு அழகிய தீவாகும். இக் கிராமத்திற்கான பிரதான போக்குவரத்து மார்க்கம் நீர் வழியாகும். இங்கு பெரும்பாலான மக்கள் மீன் பிடித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

வறட்சி காலங்களில் அனைத்து கிணறுகளிலும் நீர் வற்றிக் காணப்படுவதுடன், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கிணற்று நீரையே அந்த பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறைந்த அளவு நீரே காணப்படுகின்றது. இக்கிராமத்தில் மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மற்றைய காலத்தில் மழைபெய்தால் பயிர்களுக்கு நீர் கிடைக்கின்றது. ஆனால் குடிப்பதற்குநீர் கிடைப்பது அரிதாக வேகாணப்படுகின்றது.

வாழைச்சேனை பிரதேச சபையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பௌசர் மூலம் நீர் வழங்குகின்றனர். அது இக்கிராமத்தில் உள்ள அனைவருக்கும் போதுமானதாக இல்லை. பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடையை கழுவும் போது சில சீருடை குறுகிய காலத்தில் கிழிந்து விடுவதாகவும், சில சீருடைகள் காவி நிறத்தில் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் எங்கள் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை எப்போது தான் நிரத்தரமாக பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்று தங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பிறந்த காலம் தொட்டு உவர் நீரையே பருகி வருகின்றோம். எங்கள் பிள்ளைகளாவது எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்.

எனவே தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கனாள கோ.கருணாகரன், இரா.சாணக்கியன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here