தமிழ்பக்க செய்தி பச்சைப்பொய்; முன்னணியின் அத்தனை உறுப்பினர்களும் எம் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்: சுகாஷ்!

மணிவண்ணன் ஆதரவாளர்களான பிரதேசசபை உறுப்பினர்களின் வீடுவீடாக சென்று, மாகாணசபை ஆசன ஆசை காட்டும் நடவடிக்கையில் முன்னணி தலைமை ஈடுபட்டு வருவதாக தமிழ்பக்கம் நேற்று (31) வெளியிட்ட செய்தியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மறுத்துள்ளது.

அந்த கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் இன்று (1) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக சில இணையத்தளங்கள் வெளியிடும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். உண்மையின் உரைகல்லாக இருக்க வேண்டும்.

நேற்றும், நேற்றும் முன்தினமும் சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது. நேற்றும் சில இணையங்களில், எமது தலைவரும், செயலாளரும் சில உறுப்பினர்களின் வீடு தேடிச் சென்று, மாகாணசபை ஆசனம் தரலாமென, தமது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கைக்கான அமைப்பு. இது தனிநபர்களை முன்னிறுத்தும் கட்சி. எமது கட்சியின் உறுப்பினர்கள் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள். அவர்களை வீடுவீடாக தேடிச் செல்ல வேண்டிய நிலைமை எமது கட்சிக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை.

முன்னணியிலுள்ள அத்தனை உறுப்பினர்களும் கட்சியின் மீதும், தலைமையின் மீதும் விசுவாசத்துடன் எம் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அதனால் மக்களை குழப்பும் விதமான ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறேன்.


ஆசிரியர் குறிப்பு- மணிவண்ணன் ஆதரவாளாக பிரதேசசபை உறுப்பினர்களின் வீடு தேடிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சமரச பேச்சில் ஈடுபட்ட விவகாரத்தை முழுவதும் உறுதிசெய்ய பின்னரே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது என்பதை வாசகர்களிற்கு பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here