சென்னையில் கண்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கி உயிரிழந்த கணவன், மனைவி!

சென்னையில் பைக்கில் சென்ற கணவன், மனைவி மீது கண்டெய்னர் லாரி மோதியது. அப்போது இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்குள் நடுவில் இருவரும் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(31) இவரின் மனைவி பனாசீர் (28). ஷாஜகான், சில்வர் பட்டறையில் வேலைப்பார்த்து வந்தார். இந்தத் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஷாஜகானும், அவரின் மனைவியும் எண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எண்ணூர் விரைவு சாலை முழுவதும் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்துச் சென்றுக் கொண்டிருந்தன. அதனால் ஷாஜகான் மெதுவாக பைக்கை ஓட்டினார். இந்தச் சமயத்தில் இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்கிடையில் பைக் சிக்கிக் கொண்டது. கண்இமைக்கும் நேரத்தில் ஷாஜகானும் பனாசீரும் நசுங்கினர். அதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்தத் தகவலறிந்ததும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆம்புலன்ஸ் வர நீண்ட நேரமானதால் இருவரின் சடலங்களும் நடுரோட்டிலேயே கிடந்தன. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

ஆத்திரமடைந்த சிலர், நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கற்களை வீசினர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், லாரியின் முன்பக்க கண்ணாடியை ஆவேசமாக உடைத்தார். அதை சிலர் தடுத்தனர். ஆனாலும் அந்த இளைஞர் கண்ணாடி முழுவதும் உடைத்த பிறகே அமைதியானார்.

ஷாஜகான், அவரின் மனைவி ஆகியோரின் சடலங்களைப் பார்த்து உறவினர்கள் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுதனர். ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பொதுமக்களும் உறவினர்களும் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.

விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கண்டெய்னர் லாரிகள் கண்மூடித்தனமாக இந்தச் சாலையில் செல்கின்றன. மேலும் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை. அதை போலீஸாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. தற்போது பைக்கில் வந்த கணவனும் மனைவியும் கண்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்ததும் ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் சில மணி நேரத்துக்குப்பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. அதனால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உறவினர்கள் கூறுகையில், ‘ஹாஜகானும் அவரின் மனைவியும் உறவினருக்கு உடல் நலம் சரியில்லை என்றுதான் பைக்கில் சென்றனர். வீட்டுக்கு திரும்பி வரும்போதுதான் கண்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் 2 பெண் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்றனர்.

ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here