ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் ஒருபோதும் அரசு வடக்கை புறக்கணிக்காது: காதர் மஸ்தான்

துரித அபிவிருத்தியை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் செயற்றிட்டத்தில் எக் காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்பட மாட்டாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இவ் விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேலும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் எனும் இலக்கு மிகப் பெரியது. இதனை ஒரே இரவில் ஒரேயடியாக செய்து விட முடியாது. இப் பெரிய செயற்றிட்டத்தை கட்டங்கட்டமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் எமது வடமாகாணம் அடுத்த கட்டங்களிலே நிச்சயமாக உள்வாங்கப்படும்.

இதற்கிடையில் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களில் அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களை புறக்கணித்து விட்டதாக பொய்ப்பிரச்சாரங்களை பரப்பிக் கொண்டு அரசை மலினப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அரச உயரதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினேன்.

பொது மக்கள் இவ்வாறு பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகணங்களின் உரிய மாவட்டங்களின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளை வழங்க அரசு தீர்க்கமாக முடிவெடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான பிரச்சாரங்களை இவர்கள் கட்டவிழ்த்துள்ளனர் என்பதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக மதித்தே எமது அரசு செயற்பட்டு வருகின்றது.

இதனை இந்த வங்குரோத்து அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here