இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சுவாரஸ்யம்: நாணயச்சுழற்சி மூலம் எம்.பி தெரிவாகும் நிலை!

இரத்தினபுரி மாவட்ட எம்.பி பிரேமலால் ஜெயசேகர, நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்தால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாணயச்சுழற்சியின் மூலம் எம்.பி தீர்மானிக்கப்படும் சுவாரஸ்ய சம்பவம் இடம்பெறும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, மாவட்டத்தில் இரண்டாவது அதிக விருப்பு வாக்கை பெற்ற பிரேமலால் ஜெயசேகர கொலைக்குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

பிரேமலால் ஜெயசேகர கொலை குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது நாடாளுமன்ற அங்கத்துவம் பற்றிய தீவிரமான விவாதம் நடந்து வருகிறது.

ஜெயசேகரவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவோ, அல்லது வாக்களிக்கவோ முடியாது என்று சட்டமா அதிபர் நேற்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவித்தார்.

ஜெயசேகர தனது நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்தால், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன பட்டியலில் இருந்து புதிய எம்.பி. தேர்வு செய்யப்பட வேண்டும்.

அந்த பட்டியலில் ஜெயசேகரவிற்கு அடுத்து அதிக வாக்கை பெற்றவரே தெரிவு செய்யப்படுவார். ஆனால், சுவாரஸ்யம் என்னவெனில், ஜெயசேகரவிற்கு அடுத்த நிலையிலுள்ள இருவரும் சம அளவான வாக்கை பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பெரமுன சார்பில் போட்டியிட்ட ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹன கொடித்துவக்கு இருவரும் 53,261 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இரத்னபுரி மாவட்டத்தில் ஜெயசேகரவிற்கு அடுத்த நிலையிலுள்ள இரண்டு வேட்பாளர்களும் சமஅளவான வாக்கை பெற்றுள்ளதால்- ஒருவேளை ஜெயசேகரவிற்கு பதிலாக புதிய எம்.பி தெரிவாகும் அவசியம் எழுந்தால் நாணயச்சுழற்சி மூலம் அடுத்த எம்.பி தெரிவாகுவார் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்னபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாணயச்சுழற்சியை நடத்தி எம்.பியை தெரிவு செய்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here