3 அலுவலக அறைகளை பிடிக்க வேண்டாம்: அங்கஜனிற்கு பசில் மறைமுக சூடு!

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள், இணைத்தலைவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் இணைந்தே செயற்பட வேண்டும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள், கொள்கையை முன்னெடுப்பவர்கள். அவர்களை புறந்தள்ளி எந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் செயற்பட முனையக்கூடாது என கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் தனக்கு தெரியாமல் முன்னெடுக்கக்கூடாது என அண்மையில் மாவட்ட செயலாளருக்கு இட்ட உத்தரவின் பின்னணியில் ஜனாதிபதியினால் இந்த உத்தரவிடப்பட்டதாக கருதப்படுகிறது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவை இட்டுள்ளார்.

அத்துடன், யாழ் மாவட்ட செயலகத்தில் தனது பாவனைக்காக அங்கஜன் 3 அலுவலக அறைகளை கோரியதையும், நகைச்சுவையாக பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் சில மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைவர்கள், தாம் செயற்பட அலுவலகம், தளபாடம் இல்லையென முறைப்பாடு வைத்தனர்.

இதன்போது, சிரித்தபடி பசில் ராஜபக்ச- “நீங்கள் அலுவலகம், தளபாடம் இல்லையென்கிறீர்கள். ஆனால் இங்குள்ள சிலர் ஒன்றுக்கு மூன்று அலுவலகங்களை பிடித்து வைத்துள்ளனர். அப்படி மூன்று அலுவலகங்களை பிடிக்காதீர்கள்“ என்றார்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலாளருக்கு, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் அனுப்பிய கடிதத்தில், தனக்கு மூன்று அலுவலக அறைகளை ஒதுக்கும்படியும், ஒருங்கிணைப்புக்குழு அலவலகத்திற்கும், மாவட்ட செயலகத்திற்குமான இணைப்பாளராக தனது தந்தை செயற்படுவார் என்றும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here