வயோதிபத்தாய் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை: அதிர்ச்சியில் மகன் தற்கொலை முயற்சி!

வயோதிபத்தாய் தீ மூட்டி தற்கொலை செய்ததையடுத்து, அவரது மகனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது ஆபத்தான் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறக்கொட்டாஞ்சேனை, சாஸ்திரியார் வீதியில் வசித்துவந்த பொன்னையா பிள்ளையம்மா (76) என்ற வயோதிபத்தாயின் கணவர் பல வருடங்களுக்கு முன்பு மரணமானதால், தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது இரு ஆண் மக்களும் திருமணம் முடித்திருந்த போதும், அண்மைக் காலமாக இருவரும் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து, மூத்த மகன் அவரது மகன் வீட்டிலும், இளைய மகன் தாயின் வீட்டிலும் வசித்து வந்திருக்கிறார்கள்.

காச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இத் தாயினை, சந்திவெளி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இவரது இளைய மகனே அழைத்துச் சென்று வந்தார்.

ஆனாலும் இவரது மகன் தொழில் முயற்சி ஏதுமின்றி தாயின் வீட்டிலேயே இருப்பதால் வயோதிபத்தாய் யாசகம் பெற்றே தங்கள் ஜீவனோபாய தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.

தேவாபுரம் புகையிரத நிலையத்துக்கு சற்று தொலைவில் தகரக் கொட்டிலுக்குள் வசித்து வந்த இவ் வயோதிபப் பெண் நேற்று (31) காலை 09.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து உடம்பு நனைந்த நிலையில் கையில் பச்சை நிற பிளாஸ்டிங் போத்தலுடனும், மற்றைய கையில் தீப்பெட்டியுடனும் வெளியேறிச் செல்லும் போது , அயலவர்கள் விசாரித்த போது, குளிக்க போவதாக கூறிச்சென்றுள்ளார்.

தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள புகையிரத பாதையை கடந்து சென்று, பாடசாலை குறுக்கு வீதி தேவாபுரத்தில் வைத்து தன் உடம்பில் தீவைத்து கொண்டதை இளைய மகன் கண்டதும், அதனை அணைப்பதற்கு முயற்சித்தும், முடியாமல் போகவே, தீயினால் கருகிப்போன தாயின் உடலை கண்ட மகன், அவசரமாக வீடு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர், ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

வயோதிபத் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டினார் என்பது விசாரனைகள் மூலம் தெரிய வந்தாலும், வயோதிபத்தாயின் தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை.
அவரது இளைய மகன் சுய நினைவுக்கு வந்தால் மட்டுமே தற்கொலைக்கான காரணம் தெரியவரலாம்.

ஆனாலும், வறுமை காரணமாகவும் தொழிலுக்கு செல்லாது வீட்டோடு இருக்கும் மகனோடு முரண்பட்டும் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிசாருடன், நீதிபதியின் கட்டளைக்கமைவாக சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரனை அதிகாரி நஸீர், விசாரனைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here