நீர்கொழும்பு சிறைக்கண்காணிப்பாளரை ‘கைது’ செய்த சிசிரிவி காட்சியை வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்களம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்போய கைது செய்யப்படவில்லை, முன்னரே பேசி தீர்மானித்தபடி பொலிசாரும் அவரும் சந்தித்தனர் என்ற தமது ஆதாரத்திற்கான சிசிரிவி கமரா காட்சிகளை சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அனுருத்த சம்போயவை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், 11 நாட்கள் சம்போய கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், குருநாகலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் அனுருத்த சம்போய கைது செய்யப்பட்டதாகவும், உளவுத்துறை தகவல்களின்படி அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி, பொலிஸ் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்தார்.

உளவுத்துறை தகவல்களின்படி அனுருத்த கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அறிவித்தார்.

எனினும், இந்த வழக்கு கடந்த தவணையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கைது நடவடிக்கை நாடகம், இரு தரப்பும் முன்கூட்டியே பேசி, ஒரு இடத்தில் சந்தித்து கொண்டதாகவும், தவறான அறிக்கையிட்ட நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பேச்சாளர் மீது நடவடிக்கையெடுக்கும்படி பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இன்று நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சம்போயவை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட சமயத்தில் பெறப்பட்ட சிசிரிவி காட்சியை சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் வெளியிட்டது.

இதில், நீர்கொழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரியும், சம்போயவும் சிரித்தபடி- கைது செய்யப்பட்டார் என நம்ப சிரமமான நிலையில் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here