சமுர்த்தி உத்தியோகத்தர் திட்டியதால் மரண சர்ச்சை: உயிரிழந்த தந்தை சார்பில் மகளிடம் மன்னிப்பு கடிதம் கேட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி சமுர்த்தி உத்தியோகத்தரது செயற்பாடே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், உயிரிழந்த தந்தையின் சார்பில் மகள் மன்னிப்பு கடிதம் எழுதி தந்தாலே அந்த குடும்பத்திற்கு சமுர்த்தி உதவி திட்டம் மீள வழங்கப்படும் என குறிப்பிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமுர்த்தி திணைக்களம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி, சிவயோகன் என்கிற குடும்பஸ்தர் உயிரை மாய்த்தார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது விபரீத முடிவையடுத்து பிள்ளைகள் அநாதரவாகியுள்ளனர்.

அவரது மரணத்திற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவமரியாதையாக திட்டியதேக காரணமென உறவினர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு கையளித்திருந்தனர்.

குறிப்பிட்ட நபரின் சமுர்த்தி கொடுப்பனவை, சமுர்த்தி அலுவலகம் சில மாதங்களாக வெட்டியுள்ளது. அந்த கொடுப்பனவை மீள வழங்கும்படி அவர் சமுர்த்தி பண்டத்தரிப்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி கோரிக்கை விடுத்து வந்துள்ளார். சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதற்கான சரியான காரணங்கள் எதையும் தமக்கு சொல்லவில்லையென்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தில் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், மிகுந்த விரக்தியுடனும், அவமானத்துடனும் காணப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பியதாகவும், பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மரியாதைக் குறைவாக- பலர் முன்னிலையில்- பேசியதாக அவர் பிள்ளைகளிடமும், தெரிந்தவர்களிடமும் மனவிரக்தியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“எடுக்கிறது பிச்சைக்காசு“ என்ற வசனத்தை பலர் முன் சமுர்த்த பெண் உத்தியோகத்தர் பாவித்ததாக அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரி, உறவினர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும், அது குறித்து பிரதேச செயலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென குடும்பத்தினர் குறிப்பிட்டு, தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமுர்த்தி திணைக்களம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டு பிள்ளைகளும் அநாதரவாகியுள்ளனர்.

இதற்குள், தந்தை இறந்த பின்னர், இவர்களில் க.பொ.த உயர்தரம் கற்கும் மகள் குறிப்பிட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை மீளவும் அணுகி, தமக்கு சமுர்த்தி உதவி வழங்குமாறு கோரியதாகவும், அப்போது அந்த பெண் உத்தியோகத்தர்- உயிரிழந்த தந்தை மரியாதை குறைவாக நடந்தார், அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதி தந்தாலே மீள சமுர்த்தி உதவி வழங்குவோம் என குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்திலும் இதனை குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் உறவினர் ஒருவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here