வைத்தியரின் காணியில் வேலை செய்யும் வைத்தியசாலை ஊழியர்கள்: வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!!

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக காலை 8.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுகின்றது. குறிப்பாக வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளார்விடுதி மூடப்பட்டுள்ளதுடன், சிறிய நோய்களிற்காக சிகிச்சைக்கு சென்றாலும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகின்றனர். கூலி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இப்பகுதி மக்கள் வவுனியா சென்றுவருவதற்கு பொருளாதார ரீதியாக கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பல கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அந்தவகையில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 12 வைத்தியர்களுக்கான அனுமதி இருக்கின்ற போதும் 2வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர். சத்திர சிகிச்சை நிபுணர், பல்வைத்தியர் போன்றோரும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் மருத்துவ விடுதியையும் இயக்கமுடியாமல் நோயாளர்களிற்கு சரியான சிகிச்சைகளை வழங்க முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர் விடுதி பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது.

அதேபோல பிண அறையும் இங்கு இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களிற்கான சட்டவைத்திய பரிசோதனைகள் கூட வவுனியா வைத்தியசாலையிலே இடம்பெற்றுவருகின்றது. வார இறுதி நாட்களில் காலை 8 மணிக்கு வருகைதரும் வைத்தியர்கள் 9 மணிக்கு சென்றுவிடுவார்கள்.

இங்கு கடமையாற்றும் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தி வருகின்றார். வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சிலர் அவரது காணியில் வேலை செய்து வருகின்றனர். எனவே மருத்துவ அத்தியட்சகரையும் மாற்றி வேறு ஒருவரை நியமித்து தரவேண்டும் என்று தெரிவித்ததுடன், நாம் அரசியலமைப்பு மாற்றத்தை கோரவில்லை, எமது மருத்துவத்தேவையை நிறைவேற்றித்தருமாறே கோருகின்றோம் என்றனர்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொறுமையிழந்த நிலையில் வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டனர். இதன்போது பொலிசாரால் வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக வாயிலை மறித்தபடி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன், வருகின்ற ஒரு வாரத்திற்குள் இந்த வைத்தியசாலையில் இருக்கின்ற அனேகமான பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுப்பேன். வைத்தியர்களை நியமிப்பதற்கான உத்தரவினை சுகாதார அதிகாரிகளிற்கு தொலைநகல் மூலம் நாளையதினமே அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், நோயாளர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here