சர்ச்சைக்கு மத்தியில் மு.கா பிரதித்தலைவர் ஹரீஸுக்கு பாராட்டு விழா எடுக்கிறார் மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை கௌரவிக்கும் நிகழ்வு நாளை (1) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளதுடன் கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரஹீப் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான மக்கள் பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தல் காலப்பகுதியில் மாவட்டத்தை வெல்வோம் எனும் கருத்துப்பட பேசி தமது ஆதரவாளர்களை தொலைபேசியின் பக்கம் வாக்களிக்க செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைபீடமும், முக்கியஸ்தர்களும் மட்டுமின்றி ஆதரவாளர்களும் கடுமையான அதிருப்தியில் இருக்கும் இச்சூழ்நிலையில் இந்த பாராட்டுவிழாவும் கடுமையான கோபத்தை உண்டாக்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலுடன் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இணைந்து இருவருமாக சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பாராட்டு விழா பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இரண்டு கட்சிகளினுள்ளும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்குமிடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தமையும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

இதே போன்று மக்கள் காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக செயலாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருந்த ஏ.எம்.எம்.நௌசாத் மீது அண்மையில் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று இவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here