மட்டக்களப்பில் பொலிசாரின் தடைகளை மீறி போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணிகள் எற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மேற்காள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி எழுச்சியுடன் இடம்பெற்றது.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் அவருக்கெதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு அமைவாக அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி அவர்களின் தலைமையில் இப்பேரணி இடம்பெற்றது.

பொலிசார் வீதித்தடைகளை ஏற்படுத்தியபோது அவற்றை உடைத்துக் கொண்டு பேரணி நகர்ந்தது.

இப்பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் மூன்று மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், ஏனைய அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது மட்டக்களப்பு காந்திப் பூங்கா வரை வந்தடைந்து இறுதியில் அருட்தந்தையர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here