பொங்கி வழியும் ஐ.தே.க பாசம்: மாகாணசபை தேர்தலில் சிறிதரனின் பட்டியலில் களமிறக்கப்படவுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள்!

ஐ.தே.கவிற்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில பிரமுகர்களிற்குமான தொடர்பு ஊரறிந்தது. அதை கள்ளத் தொடர்பு என்ற மாதிரி சிலர் எழுதி வருகிறார்கள். ஆனால், அதை அப்படி வர்ணிக்க முடியாது. அது நல்ல தொடர்பே.

அதாவது, சட்டபூர்வ திருமணத்தை போல- இது வெளிப்படையான உறவு.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சறுக்கலிற்கு பிரதான காரணங்களிலொன்றாக அதுவும் அமைந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் கணக்கிலெடுக்கும் நிலைமையில் அவர்களில்லை.

தீவிர தமிழ் தேசியவாதியாக பொதுமக்களிடம் காண்பித்துக் கொள்ளும் சி.சிறிதரனும் ஐ.தே.கவுடன் நல்ல உறவிலுள்ளவர்களில் முதன்மையானவர். அவர் தன்னை தமிழ் தேசியவாதியாக காண்பிப்பதற்கும், செயற்பாட்டிற்குமிடையில் துளியளவு தொடர்புமில்லையென்பதையே அவரது செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.

சிறிதரன்- ஐ.தே.க நல்ல உளவு எவ்வளவு தீவிரம் என்றால், சிறிதனின் சிபாரிசில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக களமிறங்குமளவிற்கு வந்துள்ளது.

எம்.ஏ.சுமந்திரனின் சிபாரிசுகள் அனைத்தும் அடுத்த மாகாணசபை தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற நிலைமை கட்சிக்குள் உருவாகி விட்டது. ஆனால், போகும் வரும் இடங்களிலெல்லாம் முதலமைச்சர், அமைச்சர், வேட்பாளர் உத்தரவாதங்களை பலரிற்கு சுமந்திரன் வழங்கி விட்டார். அவ்வளவு பேருக்கும் நியமனம் வழங்குவதெனில், மூன்று மாகாணசபை ஆயுள்காலம் வேண்டும்.

சுமந்திரனின் சிபாரிசில் ஒரு சிறிய வீதமே இம்முறை ஏற்றுக்கொள்ளப்படும். அதில் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களையே அவர் முன்னிலைப்படுத்துவார்.

இந்த நிலையில், ஐ.தே.கவின் இளம் அங்கத்தவர்கள் சிலரை சிறிதரனின் சிபாரிசில் மாகாணசபை தேர்தலில் களமிறக்கும் உடன்பாடு, தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பிற்கும்- ஐ.தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விஜயகலாவிற்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாகாணசபை தேர்தலில் தனது சிபாரிசு என சிறிதரன் சில ஐ.தே.க அங்கத்தவர்களை களமிறக்குவார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து விஜயகலா இந்த காய்நகர்த்தலை மேற்கொள்கிறார். தனது அணியினர் கூட்டமைப்பின் ஊடாக மாகாணசபை உறுப்பினர்கள் ஆகினால், நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனக்கு உதவுமென்பது விஜயகலாவின் கணக்கு.

இதற்கு செயல் வடிவம் கொடுக்கிறார் சி.சிறிதரன். இதன்படி, ஐ.தே.கவின் பிரதேசசபை உறுப்பினரான இணுவிலை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை, தனது தரப்பில் பரிந்துரைக்கும் முதலாவது ஐ.தே.க பட்டியல் உறுப்பினராக சிறிதரன் உறுதிசெய்தார்.

விஜயகலாவினால் சிபாரிசு செய்யப்பட்டவர்களின் வீடுகளிற்கே சென்று, அவர்கள் தேறுவார்களா என மதிப்பிட்டு வருகிறார் சிறிதரன். இதன்படி, இணுவிலிலுள்ள பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்கு சென்று பரீட்சை நடத்தி, அவரை தனது தரப்பினால் ஐ.தே.கவிற்காக களமிறக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது தமிழ் அரசு கட்சியின் இளம் உறுப்பினர்கள் மற்றும் சிறிதரன் தரப்பிலுள்ள இளம் உறுப்பினர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. நமது தலைவர்கள் இப்படி “கிடைத்தவரை லாபம்“ என இயங்கினால், கட்சியின் இளம் உறுப்பினர்களை வளர்ப்பது எப்படி?, இவர்கள் தமிழ் தேசியம் என கூறி மக்களை ஏமாற்றுகிறார்களா என கொதிக்க ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here