திருகோணமலை மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

திருகோணமலை மீனவ மக்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை, டைனமைற் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி இன்று (29) மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை வீரநகர் சிறுவர் பூங்காவில் இப்போராட்டம் இன்று (29) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி மீனவ மக்களுக்கான ஒரு தீர்வை கண்டதில்லை. ஆகையால், இம்முறை இரவில் சுருக்கு வலையையும் டைனமைற்றையும் நிறுத்தக்கோரி இம்முறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய விரைவில் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பத்தாயிரம் மீனவர்கள் நன்மை பெறுகின்ற இக்காலகட்டத்தில் பத்து பேர் மாத்திரமே சிறப்பு வலைகளையும் தட்டுகளையும் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதினால், எதிர்காலத்தில் மீன்கள் அழியக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், உடனடியாக இதற்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கையில் ஜமாலியா, கிண்ணியா, புல்மோட்டை மற்றும் இறக்கண்டி போன்ற பகுதிகளிலேயே அதிகளவிலான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருகோணமலை மாவட்ட மீனவர்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை மற்றும் டைனமைற் பாவிப்பவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here