புதிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நாங்கள் நினைவு கூர்ந்து வந்தோம்.தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் நிறந்தரமான முடிவு ஒன்றை நாங்கள் எதிர் பார்த்துள்ளோம்.

எனவே புதிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை இடம் பெற்றஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர் வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நினைவு கூறப்பட உள்ள நிலையில் வடக்கு கிழக்கில் அன்றை தினம் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

வடக்கில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதோடு,மகஜர் கையளிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகத்தை சென்றடையும். மாவட்டச் செயலகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக மகஜர் கையளிக்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தலைமையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளோம்.

குறித்த மகஜரானது மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களின் தலைவிகளும் இணைந்து கையளிக்கவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும், உள்ளூர் தினத்தையும் நாங்கள் நினைவு கூர்ந்து வந்தோம்.

தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் நிறந்தரமான முடிவு ஒன்றை நாங்கள் எதிர் பார்த்துள்ளோம்.அதனை அன்றைய தினம் கோரிக்கையாக முன் வைக்கவுள்ளோம்.

புதிய அரசாங்கம் மக்களினுடைய பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். சர்வதேசம் இவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் அவர்களின் உறவுகள் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி வீதியில் அலை மோதி நிற்கின்றனர்.

அவர்களுக்காக நாங்களும் உதவியாக இருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் இக் காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எவ்விதமான முடிவுகளும் முன் வைக்கப்படவில்லை.

எனவே தற்போது உள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கையில் ஒப்படைக்கப்பட்ட 210 பேர்களின் நிலை என்ன? அவர்களின் முழு விபரங்களும் அடங்கிய கோவையினை நாங்கள் கையளித்துள்ளோம்.

அதற்கான முடிவை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை எதிர் வரும் 30 ஆம் திகதி இடம் பெற உள்ள பேரணி ஊடாக நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிலர் பிரித்து ஆள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து செயற்பட வேண்டாம் எனவும், அதற்குல் அரசியலை பிரயோகிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோளை முன் வைக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றாக இணைந்து செயல்பட சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here