தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானது!

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற அதிகாரம் கிடைக்க வேண்டும். அந்த இலக்கை அடைய தொடர்ந்தும் உழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நிலையில் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல் காலத்திலேயே நாங்கள் கூறியிருந்தோம். ஆயினும் அதனை எமது மக்கள் முழுமையாகக் கேட்கவில்லை. அதனால் எமக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவின் பின்னர் கூட்டமைப்பின் பலத்தைக் குறைப்பதற்காக தாம் தந்திரோபாயம் வகுத்துச் செயற்பட்டதாக அரச தரப்பினரே தற்போது கூறுகின்றனர். உண்மையில் அவர்களது தந்திரோபாயம் என்ன என்பதை நாங்கள் அறியாமல் இல்லை. அதனை முழுமையாக அறிந்து தான் மக்களுக்கும் சொல்லியிருந்தோம்.

அவ்வாறு நாங்கள் சொல்லி வந்த போதிலும் மக்கள் அதனைக் கேட்கவில்லை. தற்போது கூட்டமைப்பிற்கு சிறு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அப்பால் சென்று வாக்களித்தும் உள்ளனர்.

இந்த அரசு கட்டாயம் வருமென்றே பலரும் கருதியிருந்தனர். அதனால் தமிழர் தரப்பு பலமாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தோம். ஆயினும் தமிழர் தரப்பின் ஒட்டுமொத்த ஆதரவும் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களுக்கு கணிசமான ஆதரவை இந்தத் தேர்தலிலும் வழங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தேசியம் சார்ந்த விக்கினேஸ்வரன் கயேந்திரகுமார் ஆகிய தரப்புகளுக்கும் மக்கள் வாக்களித்திருந்தாலும் அதற்கு அப்பால் சென்றும் வேறு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.
அபிவிருத்திக்காக தான் அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றால் கடந்த ஆட்சியில் நாங்கள் பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் எதிர்கால அபிவிருத்திக்காக இந்தத் தரப்பினர்களுக்கு வாக்களித்தார்களோ தெரியவில்லை.
ஆகவே இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து நாங்கள் மீண்டு வர வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பது தற்காலிகமானது தான். ஆகையினால் தமிழ் மக்களின் பலமான அமைப்பாக இருக்கின்ற கூடு;டமைப்பிற்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதனூடாக நாங்கள் முன்நோக்கிச் செல்ல முடியும்.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பயணித்து எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரம் கிடைக்க உழைக்க வேண்டும். அது கிடைக்கும் போது தான் எமது மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும் என்பதுடன் உண்மையான அபிவிருத்தியையும் செய்ய முடியும். எனவே அந்த இலக்கை அடைய தொடர்ந்தும் உழைக்க வேண்டும். என்பதுடன் அதற்கு அனைவரும் தொடர்ந்தும் எமக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here