மேல் கொத்மலை நீர்த்தேகத்தை ஒட்டியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புக்களை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் சோதனையிட்டனர்.
தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுட்டனர்.
இதன்போது, மேல் கொத்மலை நீர்த்தேகத்தை ஒட்டியுள்ள குடியிருப்புக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் மற்றும் கழிப்பறை கழிவுகள் நீர்த்தேகத்தில் கலப்பது கண்டறியப்பட்டது.
சோதனையின் போது, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள சுமார் 40 குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீர்த்தேகத்திற்குள் நேரடியாக கழிவுகள் வெளியேற்றுவது கண்டறியப்பட்டது.
நீர்த்தேக்கத்திற்குள் கழிவுகளை கலக்கவிட்ட குடியிருப்பு, வர்த்தக நிலையங்களிற்கு 7 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்த்தேகத்திற்குள் கழிவுநீர், மலக்கழிவுகளை கலப்பதை தடுக்க 7 நாட்களிற்குள் மாற்று வழியை கண்டறிய அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த அவகாசத்தில் மாற்று ஏற்பாடு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர்.
இதன்போது, லிந்துலை நகரசபை உறுப்பினர் பசன் ஹிமலக அங்கு பிரசன்னமாகி, மேல் கொத்மலை நீர்த்தேக்க நிர்மாண பணியின்போது முறையான திட்டமிடாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது, இதை பொதுமக்களால் சரி செய்யவே முடியாது, அது அதிகாரிகளின் தவறு என குறிப்பிட்டார்.