‘மணிவண்ணன் ஆதரவாளர்களிற்கு புனர்வாழ்வு’: மூர்க்கமாக நிற்கும் முன்னணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் ஆதாரவாளர்களாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கு “புனர்வாழ்வு“ திட்டமொன்றை இரகசியமாக முன்னெடுக்க கட்சி தலைமை நடவடிக்கையெடுத்துள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கான திறன் விருத்தி செயலமர்வு என்ற பெயரில், இரண்டு நாள் வதிவிட பயிற்சி பட்டறை வழங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை தீர்மானித்துள்ளது.

திறன் விருத்தி செயலமர்வு என பெயரிடப்பட்டிருந்தாலும், அது உண்மையில் மணிவண்ணன் ஆதரவாளர்களிற்கான “புனர்வாழ்வு“ திட்டம் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நியமன பட்டியல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில், மணிவண்ணன் ஆதரவாளர்களை பதவி நீக்கி, கஜேந்திரகுமார் தரப்பை சேர்ந்தவர்களிற்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் பல நியமன பட்டியல் உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் மணிவண்ணன் ஆதரவாளர்களிற்கே பதவிநீக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் வட்டாரங்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை நினைத்த விதமாக பதவிநீக்க முடியாத காரணத்தினால், அவர்களை வழிக்கு கொண்டு வர முன்னணி இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

யாழ் நகரிலுள்ள தங்குமிடமொன்றை மொத்தமாக வாடகைக்கு பெற்று, இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மணிவண்ணன் ஆதரவாளர்களை தமது பக்கம் திருப்பும், புனர்வாழ்வு திட்டங்கள் அந்த இரண்டு நாளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here