பாகிஸ்தான் எமக்கு உதவியிருக்காவிட்டால் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருப்பார்கள்: வெளிவிவகார செயலாளர்!

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை வென்றெடுப்பதை பாகிஸ்தானின் உதவியினாலேயே தடுக்க முடிந்ததென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு மிக முக்கியமான நாடுகள். ஒரு தரப்பினர் மற்றைய தரப்பிற்கு எதிராக இலங்கையை பாவிக்க நாம் இடமளிக்க கூடாது. மேற்கு சார்ந்த வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகும் காலம் கனிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும், இந்தியாவும் எமது நண்பர்கள். நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நாடுகளும் எமக்கு உதவின. யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆரம்பித்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட வடக்கை நாம் இழந்து விட்டோம். பாகிஸ்தானே எமக்கு பல்குழல் பீரங்கிகளை வழங்கி உதவியது. வான் மார்க்கமாக பாகிஸ்தான் அவற்றை அனுப்பி வைத்தது. அவற்றை பயன்படுத்தியே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் தடுக்க முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் எமக்கு முக்கியமான நாடுகள். இலங்கையை ஒரு தரப்பிற்கு எதிராக பயன்படுத்தும் இடமாக மாற்ற இரண்டு தரப்பிற்கும் இடமளிக்க கூடாது. இந்தியா எமது அயல்நாடு.

இலங்கை மிதமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவை முதலிடம் வகிக்கிறோம். மூலோபாய பாதுகாப்பின் அடிப்படையில் நாம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டியதில்லை. நாம் இந்தியாவுக்கு நன்மை செய்ய வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில், நாங்கள் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் பொருளாதார வளர்ச்சியென்று வரும்போது, ​​நாங்கள் மற்ற தரப்புக்களையும் சமாளிக்க வேண்டும் என்று அட்மிரல் ஜெயநாத் கொலம்பே கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்குவது தவறு.

அதேவேளை, முழு உலகுடனும் நல்லுறவை பேண வேண்டும். மேற்குலகு சுமத்தும் மனித உரிமை குற்ற்சாட்டுக்கள் நியாயமற்றவை. அது நல்லிணக்கத்திற்கு உதவாது. அவை எம்மத்தியில் பிளவையே ஏற்படுத்தும். எமக்கு எதிராக யாரும் வாளை வைத்திருக்க நாம் விரும்பவில்லை. பலவந்தமாக நல்லிணக்கத்தை வென்றெடுக்க முடியாது. இது சமூகத்திலிருந்து ஏற்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வது எமது இலக்கல்ல. பொருளாதார அபிவிருத்தியே எமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here