முல்லைத்தீவில் சொந்த காணியை துப்பரவு செய்த 3 விவசாயிகள் கைது: இராணுவம், வனவள திணைக்களம் அடாத்து!

முல்லைத்தீவில் தமது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ய துப்பரவு செய்தபோது கைதான 3 தமிழ் விவசாயிகளையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட, அக்கரைவெளி வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, அக்காணிகளுக்குரிய தமிழ் விவசாயிகள் மூவர் வனவளத் திணைக்களத்தினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு குறித்த அக்கரைவெளிப் பகுதியில் தமிழ் மக்கள் விவசாயம் செய்யக்கூடாதென வனவளத் திணைக்களத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும், இராணுவத்தினர் மிரட்டியதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

அக்கரைவெளியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு வயல் நிலங்கள் காணப்படுகின்றன. அங்கு ஏறக்குறைய 500 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்குரிய காணிகள் காணப்படுகின்றன.

குறித்த காணிகளில் கடந்த வருடமும் தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் காணிகளுக்குரிய எமது தமிழ்மக்கள் தமது வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடடிருந்தனர். அப்போது அங்கு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை வனவவளத் திணைக்களத்தினர் கைதுசெய்து இன்றுநீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இக்காணிகள் அனைத்தும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகளாகும். அதற்குரிய ஆவணங்களும் அவர்களிடம் இருக்கின்றது. குறிப்பாக 1957ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் அவர்களிடம் உள்ளன. இதனைவிட பிரித்தானிய அரசினால் வழங்கப்பட்ட காணி உறுதிகளைக்கூட அந்த மக்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும்போது, தற்போது குறித்த காணிகளுக்குள் எமது மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அத்துமீறி நுழைந்துகொண்டு சிலர் அடாவடித்தனமாகச் செயற்படுகின்றனர் என அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இந் நிலையில் இன்று (26) அக்கரைவெளி வயல் காணிகளுக்குரியவர்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற தமிழ் விவசாயிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட செயலரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையடலின் முடிவில் எதிர்வரும் சனிக்கிழமையன்று இக் காணிப் பிணக்குத் தொடர்பில் ஆராயவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமையன்று கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் காணி உத்தியோகத்தர்கள், மற்றும் உரிய அதிகாரிகள் கொக்கிளாய்க்கு வருகைதந்து, இக் காணிப் பிரச்சினைக்குரிய மக்களை சந்திப்பதாகவும், அங்கு யாருடைய காணிகள் என்ற விபரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும்படியும், அதற்குப் பிற்பாடு மீண்டும் இது தொடர்பில் ஓர் கலந்துரையாடலை ஒழுங்குசெய்து இந்த மக்களுக்கான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துவைப்பதாக மாவட்டசெயலரால் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here