தமிழ் தேசியத்திற்கு சரிவில்லை; ஆட்கள் மாறினார்களே தவிர 5 ஆசனமும் கிடைத்தது: விமலில் விழல் கதைக்கு சீ.வீ.கே பதிலடி!

விமல் வீரவன்ச கூறுவதைப் போல   தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை என்கிறார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழ் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது அதிசயமான கருத்து. இந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்க வில்லை. தமிழ் தேசியம் அதே நிலையில் தான் இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும் எல்லாருமே தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ஆட்கள் மாறி இருக்கிறார்களே தவிர கோட்பாடுகள் அல்லது தமிழ் தேசியம் மாறவில்லை. எங்களை விட்டு பிரிந்து செல்லவில்லை.

ஏதோ ஒரு வகையிலே தேர்தல் காலத்தில் சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. சில இடங்களில் மூலைமுடுக்குகளில் சிலர் வாக்கு வங்கியினை சேகரித்துள்ளார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதுவே எங்களுடைய அரசியலாக இருக்க முடியாது. ஆகவே நாங்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியம் சார்ந்து எல்லாரும் போராடுவோம். விமல் வீரவன்ச கூறுவதைப்போல எமது தமிழ் தேசியம் தோற்றுவிட்டது அல்லது தோற்கடித்து விட்டோம் எனக் கூறுவது தவறான விடயம் என்றார்.

அதேபோல் முன்னாள் போராளிகளுக்கு இனி எந்தவித உதவியும் அரசாங்கத்தினால் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் தெரிவிக்கையில்,

அரசாங்கமானது முன்னால் சொன்னதை பின்னால் மறுதலிக்கிற ஒரு கோட்பாடு இருக்கின்றது. விடுதலைப்புலிகள் என்ற நாமத்தை விட அவர்கள் மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அநீதிகளுக்கு அவர்கள் கொல்லப்பட்டவர்கள் அங்கவீனமாக்கப்பட்டவர்கள் மனிதநேய அடிப்படையிலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. அது அரசாங்கத்தின் கடமை. அதை மறுதலிப்பது எந்த வகையில் நியாயம் என்பது என தெரியவில்லை. அவர்கள் கொலை செய்யபட்டவர்கள். அவர்களுக்கான நீதி வழங்க வேண்டிய கடப்பாடு உள்ளது. அதை அவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here