வேர்ல்ட் ஃபேமஸ் ஹீரோயின்!

வேர்ல்ட் ஃபேமஸ் ஹீரோயின்!2/26/2020 12:47:16 PM
‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ மூலம் டோலிவுட்டிலும் ஃபேமஸ் ஆகி இருக்கிறார் நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ். குஷியாக இருந்தவரை சந்தித்தோம்.

எப்படி போயிக்கிட்டிருக்கு சினிமா லைஃப்?

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் என்று உங்களுக்கு தெரியும். முதலில் டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். பிறகு டான்ஸ் போட்டியில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தேன்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் மறுக்காமல் நடித்தேன். பிறகு ‘அட்டக்கத்தி’ படம் ரிலீசானது. பிறகு ‘காக்கா முட்டை’ வந்தது. சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இன்று அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து பல்வேறு மொழிகளில் நடித்துவிட்டேன். கிட்டத்தட்ட 50 படங்களை நெருங்கிவிட்டேன்.

தங்கச்சியாவும் நடிக்கறீங்க?

அதிலென்ன தப்பு? ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த நான், உடனே விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தேன். ஹீரோ, ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதே முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் கிடைத்திருந்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். பிறகு ஏன் தங்கை கேரக்டரில் நடிக்க தயங்க வேண்டும்? நிஜ வாழ்க்கையில் நானும், என் அண்ணனும் ஃபிரெண்ட்ஸ் மாதிரி இருப்போம். அதுபோலத்தான் படத்திலும் சிவகார்த்திகேயன் தங்கையாகவும், விக்ரம் பிரபு தங்கையாகவும் நடித்தேன்.

நான் நடிக்கவில்லை என்றால், அந்த கேரக்டரை இன்னொரு ஹீரோயின் ஏற்று நடிக்கப் போகிறார். யாருக்காகவும் சினிமா காத்திருக்காது. நீயில்லை என்றால் இன்னொருவர். இன்னொருவரும் இல்லை என்றால் மற்றொருவர். ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்தேன். அதற்கு நிறைய பாராட்டு கிடைத்தது. ஆனால், எனக்கு முன்னால் பல நடிகைகளை டைரக்டர் மணிகண்டன் அணுகியபோது, இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு படம் வெளியானபோது, அதே நடிகைகள், இவ்வளவு சிறப்பான கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டோமே என்று புலம்பினார்கள்.

சிலர் எனக்கு போன் செய்து, ‘எங்களால் சரியாக கணிக்க முடியாததால், அந்த கேரக்டரை தவறவிட்டு விட்டோம்’ என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு சில ஹீரோயின்கள், அம்மா கேரக்டரில் துணிச்சலாக நடிக்க முன்வந்தார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது 22வது வயதில் ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்தேன். மஞ்சிமா மோகன் எனக்கு போன் செய்து, ‘விஜய் சேதுபதிக்கு தங்கையாக ஒரு படத்தில் நடிக்க கேட்கிறார்கள்.

எனக்கு என்ன முடிவு சொல்வது என்று தெரியவில்லை’ என்று ஆலோசனை கேட்டார். உடனே நான் அவருக்கு சொன்ன வார்த்தை, ‘நீ எது பற்றியும் கவலைப்படாமல் நடி. தங்கை வேடம் என்றால் கேவலம் இல்லை. அதுதான் கதைக்கு திருப்புமுனை கேரக்டர் என்றால் தயங்காமல் நடி’ என்று சொன்னேன். நாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால், ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். இந்த தெளிவும், நேர்மையும் என்னிடம் இருப்பதால்தான் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறேன்.

மணிரத்னத்தோட கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டீங்க போலிருக்கே?

அவர் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். இப்போது அவர் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தேன். அவ்வளவுதான். அவர் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நான் நடிக்கவில்லை. ராதிகா மேடத்துடன் ‘தர்மதுரை’ படத்தில் நடித்தேன். இப்போது ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் அவரது மகளாக நடித்திருக்கிறேன்.

ஒரு கேரக்டரை எப்படி ஏற்றுச் செய்ய வேண்டும் என்பதில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது படங்களைப் பார்த்து, இவர் எப்படி இவ்வளவு சிறப்பாக நடிக்கிறார் என்று வியந்திருக்கிறேன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்போதுள்ள இளம் நடிகைகளில், என் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக குறிப்பிட்டார். அதற்காக அவருக்கு என் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here