சொப்பன சுந்தரியின் காரின் நிலைமைக்கு வந்தது கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பு… யார் வைத்திருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது!

சொப்பனசுந்தரியின் காரை இப்பொழுது யார் வைத்திருக்கிறார்கள் என்ற தென்னிந்திய திரைப்படத்தின் பழைய நகைச்சுவை காட்சியொன்றுள்ளது. தமிழ் சமூகத்தில் எல்லா காலத்திற்குமான பிரபல நகைச்சுவையாக, அன்றாட வாழ்வில் கலந்த ஒரு நகைச்சுவை அது.

இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் சொப்பனசுந்திரியின் காரின் நிலைமைக்கு வந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா பொறுப்புக்களில் மாற்றம் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்த பின்னர், சுமந்திரன் தரப்பு தமக்கு அந்த பொறுப்பு தேவையென விடாப்பிடியாக நிற்பதால் சொப்பனசுந்திரியின் காரின் நிலைமைக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பு வந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கடந்தவாரம் இடம்பெற்ற போது, கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன்போது, சுமந்திரனின் சில கருத்துக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்தது என்பதை குறிப்பிட்ட இரா.சம்பந்தன், “ஓம் தம்பியவை… அவரை நாம் மாற்றலாம். அதை அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அதை முடிவு செய்வோம்“ என்றார்.

செல்வம் அடைக்கலநாதனின் பெயர் புதிய பேச்சாளராக பரிந்துரைக்கப்பட்டது. இரா.சம்பந்தனும் அதை ஏற்றுக்கொண்டார்.

இதன்போது, கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் மாற்றம் செய்ய இரா.சம்பந்தன் கொள்கையளவில் இணங்கியுள்ளார் என- அன்றே தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து, கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றம் செய்யப்பட்டு விட்டார் என தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு என்ற பெயரில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் கையாளப்படும் ருவிற்றர் பக்கத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் மாற்றம் செய்யப்படவில்லை, அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில்தான் அது பற்றிய முடிவெடுக்கப்படும் என.

கூட்டமைப்பின் தலைவர்கள் கொள்கையளவில் எடுத்த முடிவை- அந்த முடிவை இறுதி செய்ய இன்னும் ஓரிரு நாள் மட்டுமே உள்ள நிலையில், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் இயக்கப்படும் ருவிற்றர் கணக்கில், அதை மறுத்துள்ளது. நாடாளுமன்ற குழு கூட்டத்தில்தான் முடிவு இறுதிசெய்யப்படுமென்பது சரியென்ற போதிலும், அங்குதான் இறுதிசெய்யப்படும் என்ற தொனியில் தெரவிக்கப்பட்ட கருத்தும், அவசரஅவசரமாக மறுத்த வேகமும்- அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தை போர்க்களமாக்கும் என ஏற்கனவே தமிழ்பக்கத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உறுதிசெய்கிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன் ஆகியோர் சுமந்திரன் ஆதரவு அணியாக களமிறங்கி அதகளம் செய்ய காத்திருக்கும் தகவலையும் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் விவகாரம் சொப்பசுந்தரியின் காரின் நிலைமைக்கு சென்றுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டு வினவியபோது, கூட்டமைப்பின் பேச்சாளர் கடந்த இரண்டு தவணைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை அது பங்காளிக்கட்சிகளில் ஒன்றிற்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த முறைகளை போல தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக நடந்தால், நாம் சில அதிரடியான முடிவுகளை எடுப்போம் என்றார்.

புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனை தொடர்பு கொண்டபோது, கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றும் முடிவு இணக்கம் காணப்பட்டது. மூன்று கட்சி தலைவர்களின் முன்பாக இரா.சம்பந்தன் அதை தெரிவித்தார். பங்காளிக்கட்சிகளான எங்கள் இரு தரப்பையும் விட்டால் கூட, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரின் முடிவை மீறி செயற்படும் தரப்பு தமிழ் அரசு கட்சிக்குள் இருந்தால் நாம் என்ன செய்வது? சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here