அரசியலமைப்பு மாற்றத்தில் கட்சி பேதமின்றி ஒத்துழையுங்கள்: புதிய எம்.பிக்களிடம் மஹிந்த கோரிக்கை!

அரசியலமைப்பு என்பது ஒரு தரப்பிற்கு சொந்தமான உரிமை அல்ல. அது நம் அனைவரிலும் தாக்கம் செலுத்தும் அடிப்படை சட்டமாகும். அதில் உள்ள ஒவ்வொரு காற்புள்ளியும், முற்றுப்புள்ளியும் எமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றது. இதனால், மக்கள் கோருகின்ற அரசியலமைப்பை மாற்றும் பணியில் அரசியல் கட்சி பேதங்களை காட்ட வேண்டாம். இது எங்கள் பொறுப்பு. தற்போதுள்ள அரசியலமைப்பின் அனைத்து சாதகமான அம்சங்களையும் நாம் உள்வாங்க வேண்டும். அதற்கு தங்களது கருத்துக்களை இயல்பாக வெளிப்படுத்த வேண்டும் என புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

9 வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பாராளுமன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் இன்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய உரை நிகழ்த்தினார்.

இதன்போது பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ‘பாராளுமன்ற நடத்தை விதி’ புத்தகம் பாராளுமன்ற பொது செயலாளர் தம்மிக தசநாயகவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.

‘மக்கள் எண்ணுவது அமைச்சரொருவரை உருவாக்குவதற்கு அல்ல. தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரை உருவாக்குவதற்கே ஆகும். எவ்வாறான அதிகாரம் கொண்ட அமைச்சு பதவி இருப்பினும், தமது பொறுப்பை முறையாக செயற்படுத்தாவிடின் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதனால் பாராளுமன்றத்தில் சிறந்த உறுப்பினராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் செயற்படுவதே இத்தருணத்தில் மிக அவசியமானதாகும்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

50 வருடங்களுக்கு முன்னர் நானும் இவ்வாறு அமர்ந்திருந்தமை எனக்கு ஞாபகம் வருகிறது. நாம் இளைய உறுப்பினர்கள் என்ற வகையில் அமர்ந்திருக்கும் போது இவ்வாறான உபதேசங்கள் தொந்தரவாக காணப்பட்டன. இவை எமக்கு தெரிந்த விடயங்கள்தானே என நீங்கள் எண்ண கூடும். ஆனால் ஒரு வழக்கமாக புதிய உறுப்பினர்களை விழிப்பூட்டுவது அனைத்து காலங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனது தந்தை முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு வந்த போது, பண்டாரநாயக்க அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று பாராளுமன்றத்தை சுற்றிக்காட்டி அது தொடர்பில் தெளிவுபடுத்தியது குறித்து கூறியிருந்தமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. பாராளுமன்ற அனுபவத்தை பாராளுமன்றத்தின் உள்ளேயே உங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது உங்களுக்கு அந்த அனுபவங்கள் கிடைக்கும்.

இந்த பாராளுமன்றத்தில் 82 புதிய முகங்கள் காணப்படுகின்றனர். 2010, 2015 போன்று 2020 இலும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்திற்கு மாத்திரமன்றி பிரதேச சபை வரை அவ்வாறு புதிய முகங்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். வேறுபட்ட இனத்தை சேர்ந்த, மதங்களை சார்ந்த, பல்வேறு வகுப்பை சேர்ந்த, பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் அரசியல் உலகிற்கு கொண்டுவந்து நாம் இந்த அரசியலை வர்ணமயமாக்கி உள்ளோம். இந்நாட்டின் அரசியலில் நான் காணும் அதிஷ்டமான விடயம் புதிய முகங்களின் வருகை என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த தேர்தல் இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பொதுத் தேர்தல் என நாம் அனைவரும் அறிவோம். அது விகிதாசார தேர்தல் முறையின் கீழ் 2/3 பெரும்பான்மை கிடைத்ததால் மட்டுமல்ல. 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாது போனதும் ஆச்சரியமூட்டும் விடயமாகும். அவை வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் இந்தத் தேர்தலின் மூலம் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல செய்தியை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பண பலத்தை கொண்டு பாரியளவிலான பிரசாரங்களை மேற்கொள்ள முடியவில்லை. போஸ்டர்கள் இல்லை. கட்அவுட்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. ஆர்ப்பாட்டங்கள் இல்லை. பேருந்துகளில் கூட்டங்களை அழைத்துவரும் செயற்பாடு இல்லை. அனைத்து இடங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட்டோம். எனினும், 71 வீதமான மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர். இது எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய செய்தியாகும் என நான் சொல்ல வேண்டும். இதன் மூலம் விளங்குவது மக்களுக்கு நாட்டின் மீதுள்ள அன்பு போன்றே சரியான வேலைத்திட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.

இம்முறை மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்று நாம் பார்க்க வேண்டும். இந்த முறை பிரதமரானாலும் அல்லது கட்சித் தலைவரானாலும் நாட்டிற்காக வேலை செய்யாவிடின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஒரு சிறந்த அரசியல் தலைமுறையிலிருந்து வந்திருந்தாலும், வேலை செய்ய முடியாவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு மக்கள் கல்விக்கு மட்டுமே வாக்களித்ததாக நினைக்க வேண்டாம். கல்வியறிவு போன்றே நாட்டின் மீது அன்பு கொண்டிருந்தால், வேலை செய்ய முடியுமாயின் மாத்திரமே இந்நாட்டு மக்கள் தற்போது வாக்களிக்கின்றனர். மக்கள் தொடர்ந்தும் இவ்வாறே செயல்படுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த இளம் உறுப்பினர்களுக்கு நான் கூற விரும்புகிறேன், இளமையாக இருப்பதனாலும், ஒரு பதவியில் இருப்பதனாலும், ஒரு தலைமுறையிலிருந்து தோற்றம் பெற்றவர்களானாலும் அல்லது படித்தவர்களாக இருப்பதனாலும் பயனில்லை. மக்கள் எமக்கு வழங்கியுள்ள பணியை சரியாகச் செய்யாவிட்டால், அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும், துறைமுகங்களா, விமான சேவையா, களிமண்ணா அல்லது புளியா என்பதை பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் சமமாகக் கருதி, அதை நாட்டின் சேவையாகக் கருதி வேலை செய்ய வேண்டும். முக்கியத்துவம் இருக்கின்றதா என்பது மக்களுக்கு அவசியமற்றது. அதுமாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கருத்திற் கொள்ள மாட்டார்கள். தங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்தத் தேர்தல் சுட்டிக் காட்டுகிறது.

தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கு உறுப்பினர் பதவியையும், வயதையும் ஒரு தடையாக்கிக் கொள்ள வேண்டாம். நான் 1970 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு வந்த பின்னரே நான் சட்டக் கல்லூரியில் இணைந்தேன். பாராளுமன்றத்திற்கு செல்லும் போதே சட்டக் கல்லூரிக்கும் சென்று படித்தேன். இன்று போல இணையம் அல்லது ஒன்லைன் வசதிகள் இருக்கவில்லை. இன்று நீங்கள் இங்கிருந்து கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் பதிவு செய்து படிக்கலாம். அது எதுவும் இல்லாதபோதும் கூட, நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இடையூறாக்கிக் கொள்ளாது சட்டத் தேர்வை எழுதினேன். 1977 இல் தோல்வியுற்ற பின்னர், வழக்கறிஞர் பதவி மட்டுமே எஞ்சியது.

இளம் உறுப்பினர்கள் இப்போது பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் அமைச்சர்களாகிவிட எதிர்பார்க்கின்றனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை பாராளுமன்றத்தில் சந்தித்து நாட்டிற்காக பணியாற்ற தங்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியை வழங்குமாறு கோருகின்றனர். மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது அமைச்சர் ஒருவரை அல்ல, உறுப்பினர் ஒருவரையே என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் எண்ணுவது அமைச்சரொருவரை உருவாக்கிக் கொள்வதற்கு அல்ல. தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரை உருவாக்குவதற்கே. எவ்வாறான அதிகாரம் கொண்ட அமைச்சு பதவி இருப்பினும், தமது பொறுப்பை முறையாக செயற்படுத்தாவிடின் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதனால் பாராளுமன்றத்தில் சிறந்த உறுப்பினராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் செயற்படுவதே இத்தருணத்தில் மிக அவசியமானதாகும். அதேபோன்று அமைச்சு பதவியின்றி அரசாங்கத்தில் இருக்க முடியாதவருக்கு ஒருபோதும் எதிர்க்கட்சியில் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமைச்சுப் பதவிக்காக அரசியலில் ஈடுபடுபவருக்கு உறுப்பினராக பொறுப்பை நிறைவேற்ற முடியாது. அவ்வாறு அமைச்சு பதவியில் தங்கியிருப்பவர்கள் தான் எதிர்க்கட்சிக்கு சென்றவுடன் கட்சி தாவுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு அரசியலில் சிறந்த எதிர்காலம் இல்லை என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நான் அரசாங்கத்தில் இருந்த காலம் போன்றதொரு காலம் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளேன். இன்று போன்றல்ல, தமது கருத்தை முன்வைத்தால் நாய்களை போன்று நடுவீதியில் கொலை செய்து வீசும் காலத்திலேயே நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். எதிர்க்கட்சியின் குடியுரிமைகள் ஒழிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட காலப்பகுதியில் அவ்வாறான எதிர்க்கட்சிகளில் நீண்ட காலமாக உறுப்பினராக பணியாற்றி எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. அதனால்தான் 2015 தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் நான் வீட்டிற்குச் சென்றேன். வடக்கு மற்றும் கிழக்கின் வாக்கு சதவீதத்தை அறிந்துகொண்ட போதே நான் தோல்வியடைந்து விட்டேன் என நான் கூறினேன். காலை 6 மணிக்கு நான் மெதமுலனவிற்கு புறப்பட்டேன். அதுவே நமது அரசியல் வழக்கம். அதேபோன்று 04 ஆண்டுகளில் மீண்டும் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்தது, இந்த வெற்றியை பெற்றது எதிர்க்கட்சியில் இருந்து பெற்ற அனுபவத்தில் மூலமாகும்.

எனது வாழ்நாளில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்ட இரண்டு தேர்தல்கள் காணப்பட்டன. ஒன்று 2005 ஜனாதிபதி தேர்தல். அன்று வழங்கப்பட்ட பொறுப்பு தான் பிளவடைந்திருந்த நாட்டை ஒன்றிணைக்கும் பாரிய பொறுப்பு. அதனை நாம் சிறப்பாக நிறைவேற்றினோம். அதற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு பலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கினர். அடுத்ததாக இந்த தேர்தலிலேயே பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பெற்ற 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணையை, மக்கள் எம் மீது சுமத்திய பொறுப்பாக நாம் நோக்க வேண்டும். தற்போது வெறுப்பை வெளிப்படுத்தவோ, என்னை கவனிக்கவில்லை, என்னை ஓரங்கட்டிவிட்டனர் என்று குறைகூறிக் கொண்டிருக்க நேரம் இல்லை.

பாரிய அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் ஊடாக வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் சரி செய்யப்படும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நாம் அனைத்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் அபிலாஷைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

1977 முதல் இப்போது வரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டை ஆட்சிசெய்த ஒரு அரசியலமைப்பு உள்ளது. அது அவ்வப்போது திருத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பு என்பது ஒரு தரப்பிற்கு சொந்தமான உரிமை அல்ல. அது நம் அனைவரிலும் தாக்கம் செலுத்தும் அடிப்படை சட்டமாகும். அதில் உள்ள ஒவ்வொரு காற்புள்ளியும், முற்றுப்புள்ளியும் எமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றது. இதனால், மக்கள் கோருகின்ற அரசியலமைப்பை மாற்றும் பணியில் அரசியல் கட்சி பேதங்களை காட்ட வேண்டாம். இது எங்கள் பொறுப்பு. தற்போதுள்ள அரசியலமைப்பின் அனைத்து சாதகமான அம்சங்களையும் நாம் உள்வாங்க வேண்டும். அதற்கு தங்களது கருத்துக்களை இயல்பாக வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினராக நூலகத்தைப் பயன்படுத்துங்கள். இது அவர்களின் பாராளுமன்ற உரைகளுக்கு பெரும் ஆதரவாக அமையும். பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் பாராளுமன்றத்திற்கு வாருங்கள். சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து தூங்குகின்றார்கள். பாராளுமன்றம் வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இருப்பதாக வீட்டிற்கு கூறுகின்றார்கள். ஆனால் பார்க்கும் போது வேறு வேறு வீடுகளிலேயே அவர்கள் உள்ளனர். அத்தகைய சந்தர்ப்பங்கள் உள்ளன. அவ்வாறான செயற்பாடுகளுக்கு பழக்கப்பட வேண்டாம். பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் தினங்களில் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுங்கள். இறுதியாக, பாராளுமன்ற உறுப்பினராக ஆரம்பிக்கப்பட்ட உங்கள் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.

குறித்த மாநாட்டில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற பொது செயலாளர் தம்மிக தசநாயக்க, பிரதி பொது செயலாளர் நீல் இத்தவெல, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன், சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here