வேழனுக்கு மூக்கு நுனிக்கு வந்தது கோபம்; பொதுச்சந்தை கடைகள் இழுத்து மூடல்: போராட்டத்தால் வழிக்கு வந்தது பிரதேசசபை!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் திங்கள் நேற்றிரவு (24) 8 மணிக்கு பின்னர் 38 மரக்கறி கடைகளுக்கு கரைச்சி பிரதேச சபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் ஒப்பத்துடன் 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி வியாபாரிகள் 48 பேருக்கும் கூட்டம் ஒன்று திங்கள் பிற்பகல் மூன்று மணிக்கு கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு வாய்மொழி மூலம் சந்தை காப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திடீரென அறிவிக்கப்பட்டதனால் குறித்த கூட்டத்திற்கு 38 வியாபாரிகள் செல்லவில்லை. அதனால் கோபமடைந்த தவிசாளர் சேவை சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் முன்னிலையில் சபையின் செயலாளருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் சந்தை பூட்டப்பட்ட பின்னர் நேற்றிரவு (24) 8 மணியளவில் தங்களது வியாபார நிலையம் 25-08-2020 முதல் மூடப்படுகிறது என அறிவித்தல் ஓட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அதிகாலை சந்தைக்குச் சென்ற வியாபாரிகள் இது அதிர்ச்சியாக இருந்துள்ளது. நேற்றைய தினம் திங்கள் அதிகளவான திருமணம் மற்றும் புது வீடு குடிபுகுதல் போன்ற நிகழ்வுகள் இருந்தமையால் நாம் வியாபார நிலையங்களில் உதவியாளர்களை விட்டுவிட்டு சென்றுவிட்டோம். அத்தோடு பல வியாபாரிகளுக்கு தகவல் சென்றடையவில்லை. மேலும் சாதாரன ஒரு கூட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு முன் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த நடைமுறையினையும் பின்பற்றாது 11 மணிக்கு வாய் மொழி மூலம் பிற்பகல் 3 மணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு கூட்டத்திற்கு சமூகமளிக்காதவர்களின் வியாபார நிலையங்களைபூட்டுவது என்பது அநியாயமான செயல்.

கொரோனா தாக்கத்திற்கு பின்னர் தற்போது நாம் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் கரைச்சி பிரதேச சபை தவிசாளரின் இந்த நடவடிக்கை எம்மை மேலும் பாதித்துள்ளது. அத்தோடு, தொலைவில் இருந்து மரக்கறிக்களை கொண்டு வந்த விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்து செய்தறியாது நிற்கின்றனர் எனத் தெரிவித்து சந்தை வளாகத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எவ்வித சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு எழுத்து மூல அறிவித்த வழங்காத கூட்டத்திற்கு சமூகமளிக்காத வியாபாரிகளின் கடைகளை இரவு எட்டு மணிக்கு- அதாவது அலுவலக நேரம் தவிர்ந்த காலத்தில் கடைகள் மூடப்படுகிறது என எழுத்து மூலம் அவசர அவசரமாக ஒட்டியதன் நோக்கம் என்வென்று தமக்கு தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது அங்கு சமூகமளித்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் வியாபார நிலையங்களை பூட்டும் தீர்மானத்தை தவிசாளரின் பணிப்புக்கமைய வர்த்தக சங்கத்தின் தலைவரின் முன்னிலையில் மேற்கொண்டதாகவும் அதனடிப்படையில் நேற்றிரவு அறிவித்தல் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது தமது தவறான நடவடிக்கை என்றும் வியாபாரிகள் மீண்டும் தங்களின் வியாபார நிலையத்தை திறந்து நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here